×

கோவை அரசு மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் நுழைய இடையூறாக பஸ் நிறுத்தம்

கோவை, பிப்.14:   கோவை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். விபத்துக்கள் மற்றும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகும் நோயாளிகள்  அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் இம்மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆம்புலன்சில் வரும் நேரத்தை ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்று மருத்துவர்கள் வரையறுக்கின்றனர். ஆனால், இந்த பொன்னான நேரம் கோவை அரசு மருத்துவமனைக்குள் ஆம்புலன்ஸ் நுழையும் போது வீணாகி வருகிறது.
 மருத்துவமனையின் நுழைவு வாயிலுக்கு முன்புறமே பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்காக நிற்கும் தனியார் பேருந்துகள் நுழைவு வாயிலை மறித்தவாறு நிறுத்தப்படுகின்றன. இதனால், அவ்வழியாக செல்லும் ஆம்புலன்சுகளுக்கு  இடையூறுகள் ஏற்படுகின்றன.
 இதனை தடுக்கும் வகையில் நுழைவு வாயிலை மறிக்காமல் பேருந்துகளை நிறுத்த ஓட்டுநர்களிடம் மருத்துவமனை பாதுகாவலர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்கு செவி சாய்க்காத பேருந்து ஓட்டுநர்கள், பாதுகாவலர்களிடம் வாக்குவாதம் நடத்துவதோடு அதே பகுதியில் மீண்டும் பேருந்தை நிறுத்துவது தொடர்கதையாகி வருகிறது. பேருந்து நிறுத்தம் சரியான இடத்தில் அமைக்கப்படாமல் இருப்பதே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணம் என்றும், பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : Bus stop ,Coimbatore Government Hospital ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...