×

மூன்று பிரிவு ஒதுக்கீடுகளுக்கும் மருத்துவ மேல் படிப்பு கலந்தாய்வை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் வலியுறுத்தல்

திருச்சி, பிப்.14: மூன்று முறை நடத்தப்படும் மருத்துவ மேல்படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கலந்தாய்வுகளை ஒரே கலந்தாய்வாக நடத்த வேண்டும் என டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் வலியுறுத்தி உள்ளார்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முன்னாள் உறுப்பினர் பன்னீர்செல்வம் மத்திய, மாநில மக்கள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:இந்தியா முழுவதும் எம்எஸ், எம்டி ஆகிய மருத்துவ மேல்படிப்புகளுக்கான இடங்கள் 25,000க்கும் மேல் உள்ளன. மருத்துவ மேல்படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு 2019க்கான முடிவுகள் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியிடப்பட்டது. அனைத்திந்திய  50 சதவீத ஒதுக்கீடுக்கு கம்ப்யூட்டர் மூலம், மாநில அளவிலான 50 சதவீத ஒதுக்கீடுக்கு நேரடியாக, டிஎன்பி பட்ட மருத்துவ மேல்படிப்பு ஒதுக்கீடுக்கு கம்ப்யூட்டர் மற்றும் இறுதிக்கட்டம் என தனித்தனியாக மூன்று முறை நீட் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

முதலில் அனைத்து இந்திய கலந்தாய்வும் அது முடிந்த பிறகு மாநிலக் கலந்தாய்வும், அது முடிந்த பிறகு டிஎன்பி கலந்தாய்வும் நடைபெறும். இந்த 3 கலந்தாய்வுகளும் முடிவதற்கு 4 மாதங்கள் ஆகின்றன. அதிகப்பணம் செலவாகிறது. டிஎன்பி இறுதிக்கட்ட கலந்தாய்வுக்கு நேரடியாக டெல்லி செல்ல வேண்டி உள்ளது. தேர்வரும், உடன் செல்வோரும் ஒருமுறை டெல்லி சென்று வர பயணக் கட்டணம், தங்குமிடம் மற்றும் உணவு உடு்பட ரூ.50,000 வரை செலவாகிறது.கம்ப்யூட்டர் வழிக்கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை. எத்தனை பாடப்பிரிவுகளை வேண்டுமானாலும் வரிசைக்கிரமமாக தேர்வு செய்து கொள்ளலாம். எந்த பாடப்பிரிவு, எந்தக் கல்லூரி கிடைக்கும் என்று தெரியாது. லாட்டரி டிக்கெட்டில் அதிர்ஷ்டம் இருக்கிற மாதிரி தான். ஒருமுறை கம்ப்யூட்டர் வழி கலந்தாய்வில் இறுதியான பாடப்பிரிவு மற்றும் கல்லூரி தேர்வு செய்தபின், இதை விட நல்ல பாடப்பிரிவு நல்ல கல்லூரி மாநிலத்திலோ அல்லது டிஎன்பியிலோ இருந்தாலும் அக்கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.அதேபோல மாநில கலந்தாய்வில் பங்கேற்றோர் டிஎன்பி கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. இது இயற்கை நீதிக் கொள்கைக்கு முரணானது. இதனால் விருப்பமில்லாத பாடப்பிரிவை தேர்வர்கள் தேர்வு செய்ய வேண்டி உள்ளது.மூன்று கலந்தாய்வுகளையும் ஒன்றாக நடத்துவதால் 2 மாதங்களில் கலந்தாய்வை நடத்தி முடித்துவிடலாம். மூன்று பிரிவு ஒதுக்கீடுகளுக்கும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அந்தந்த மாநில தலைநரத்தில் ஒன்றாக நேரடியான கலந்தாய்வு நடத்த முடியும். அனைத்து இடமும் நிரம்பும், காலியிடம் இருக்காது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : TNPCC ,
× RELATED குரூப் 1 முதல்நிலை தேர்வில் தப்பு...