சென்டர்மீடியன் பள்ளத்தில் சிக்கி தவித்த பசுமாடு இளைஞர்கள் போராடி மீட்டனர்

திருச்சி, பிப்.14: திருச்சி விமான நிலையம் எதிரே சென்டர் மீடியன் பள்ளத்தில் சிக்கி தவித்த பசுமாட்டை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் போராடி உயிருடன் மீட்டனர்.திருச்சி விமான நிலைய காவல் நிலையம் எதிரே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நான்கு அடி உயரத்தில் சிமென்ட் தடுப்பு கட்டை அமைக்கப்பட்டது. நேற்று தடுப்புகளைத் தாண்டி குதிக்க முயன்ற பசுமாடு ஒன்று தவறி தடுப்பு கட்டையின் இடையில் உள்ள பள்ளத்தில் விழுந்தது. தடுப்பு கட்டையின் இடையில் மின் விளக்கு கம்பங்கள் பொருத்தப்பட்டிருந்ததால் வெளியே வரமுடியாமல் பசுமாடு பல மணி நேரம் போராடி அங்குமிங்கும் அல்லாடியது. மேலும் தடுப்புகளைத் தாண்டி குதிக்க முற்பட்டதால் அதன் வால் பகுதியில் காயம் அடைந்தது. இதனைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் திருச்சி தீயணைப்பு துறைக்கு 101 அலைபேசியில் அழைக்க முயன்றனர். நீண்ட நேரம் தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு இணைப்பு கிடைக்காததால் வேறுவழியின்றி அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி கயிறு கட்டி பசுமாட்டை வெளியில் மீட்டு காப்பாற்றினர். பசுமாடு வெளியே வந்ததும் மிரட்சியுடன் காணப்பட்டது. தீயணைப்புத்துறை அலுவலகத்தை நீண்ட நேரமாக தொடர்பு கொள்ள முடியாதததால், அப்பகுதி இளைஞர்கள் அதிருப்தியடைந்தனர்.


× RELATED குண்டாஸில் 2 வாலிபர்கள் கைது