அரசு ரூ.2000 சிறப்பு நிதி கணக்கெடுப்பு பணியில் பணியாளர்கள் தீவிரம்

கரூர், பிப்.14: கரூர் நகராட்சி பகுதியில் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்ற  அறிவிப்பின்படி கணக்கெடுப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.சட்டமன்ற  தொடரின்போது, ஏழை எளிய மக்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும்  என 110விதியின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாத இறுதிக்குள்ளேயே  வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,  கரூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அதற்கான பயனாளிகளை தேர்வு  செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தூய்மை இந்தியா  திட்ட பணியாளர்கள் சிலர் இதற்கென தேர்வு செய்யப்பட்டு ஒரு நபருக்கு 4  வார்டுகள் ஒதுக்கப்பட்டு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வறுமைக்  கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என நகராட்சியின் மூலம் அடையாளம்  காணப்பட்டுள்ளவர்கள் மட்டுமே இந்த பணியாளர்கள் தற்போது தேர்வு செய்து  வருகின்றனர். தமிழக அரசால் புதிதாக வழங்கப்பட்டுள்ள மின்னணு ரேஷன்  கார்டில் உள்ள ஒருசில குறியீடுகள் மூலம் இதற்கான பயனாளிகள் தேர்வு  செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளதால் பொதுமக்களும், ஆர்வத்துடன் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை,  வங்கி கணக்கு விபரம் போன்றவற்றை அளித்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

× RELATED வாக்குப்பதிவுக்கு பின்பு நடத்திய...