×

காரைக்கால் நகராட்சி சார்பில் நகர்புற வாழ்வாதார இயக்க பாரம்பரிய உணவு திருவிழா

காரைக்கால், பிப்.14: காரைக்கால் நகராட்சி சார்பில், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் பாரம்பரிய உணவு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.காரைக்கால் நகராட்சி சார்பில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க நிகழ்ச்சிகள், காரைக்கால் காமராஜர் திடலில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 5 நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பதிவுபெற்ற மகளிர் சுயஉதவிக் குழுவினர் பல்வேறு அரங்குகள் அமைத்து, சுய உதவிக் குழுவினரால் தயார் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது. 2ம் நாள் நிகழ்ச்சியாக தெருவோர வியாபாரிகள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் பங்குபெற்ற சுகாதார மற்றும் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட
உணவுத் திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவில், முளைகட்டிய தானிய வகையில் தயார் செய்யப்பட்ட வடை, கட்லெட், தோசை, சுண்டல் மற்றும் சூப் வகைகளும், நெல்லிக்காய். சோளம், ஊறுகாய், ஐஸ் கிரீம் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், நகராட்சி ஆணையர் சுபாஷ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி சத்யா ஆகியோரை கொண்ட நடுவர் குழுவினர் சிறந்த உணவு பொருட்களை தேர்வு செய்தனர்.இந்நிகழ்ச்சி நாளை (15ம் தேதி) வரை நடைபெறும் என்றும், தினமும் மாலை வேலைவாய்ப்பு முகாம், வழிகாட்டி முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், 15ம் தேதி மாலை பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என, நகராட்சி ஆணையர் சுபாஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Urban Livelihood Traditional Food Festival ,Karaikal Municipality ,
× RELATED திறப்பு விழா நடத்தியும் பயனில்லை...