ஆரல்வாய்மொழியில் மினிடெம்போ திருட முயன்றவரை ரயிலில் ஏற்றி அனுப்பிய போலீசார் மீண்டும் வந்து பைக் திருடியதால் பரபரப்பு

ஆரல்வாய்மொழி, பிப், 14:  ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தம் முத்துமாரியம்மன் கோயில் அருகே வடக்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய மினி டெம்போவை தினமும் கோயில் அருகே நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் வட மாநிலத்தை சார்ந்த மூன்று நபர்கள் மினி டெம்போவினை சுற்றி சுற்றி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் திருடுவதற்காக மினி டெம்போவின் கதவை திறக்க முற்பட்டுள்ளனர். இதனை எதிரே உள்ள டீ கடையில் இருந்த சிலர் பார்த்துள்ளனர். உடனே அங்கு நின்ற பொது மக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முற்பட்டனர்.  அப்போது இரண்டு பேர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. ஒருவரை மட்டும் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட அந்த நபரிடம் விசாரித்ததில், அவரை நேற்று முன்தினம் இரவு தோவாளை அருகே உள்ள தோப்பில் நகர் பகுதியில் வாகனத்தை திருட வந்ததாக கூறி அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தது தெரியவந்தது.  போலீசார் அவர் மனநலம் சரியில்லாதவர் எனக்கருதி அதிகாலையில் விடுவித்துள்ளனர். ஆனால் அவர் மீண்டும் ஆரல்வாய்மொழி சந்திப்பில் மினிடெம்போவை திருட முயன்ற போது பொதுமக்கள் பிடிபட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக்கருதிய போலீசார் அவரை  ஆரல்வாய்மொழி ரயில்நிலையம் அழைத்து வந்து கோயமுத்தூர் பயணிகள் ரயிலில் டிக்கட் எடுத்து ஏற்றி விட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்வதற்காக வந்த ரயில் இரண்டாவது தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தது. அந்த ரயில் புறப்படும் தருவாயில் எவரும் எதிர்பார்க்காத நிலையில், அந்த வாலிபர் கோவை ரயிலில் இருந்து இறங்கி பெங்களூர் ரயிலில் ஏறி சென்றார்.பின்னர் சிறிது நேரத்தில் நாகர்கோவிலில் இருந்து ஹவுரா செல்கின்ற ரயிலில் ஏறி ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் வந்து இறங்கி நின்றார். இதனை பார்த்ததும் நிலைய அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ரயில்வே குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்துள்ளார். இதனால் அவரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் துரத்த தொடங்கியுள்ளனர். உடனே அருகே உள்ள ஒரு காற்றாலை கம்ெபனிக்குள் சென்று பதுங்கியுள்ளார். பின்னர் சிறிது நேரம் சென்றதும் வெளியே வந்த அவர் அருகே இருந்த மற்றொரு காற்றாலை கம்ெபனியின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தை மெதுவாக தள்ளிக்கொண்டு செல்ல முயன்றார். இதனை பார்த்த பொதுமக்கள் 3வது முறையாக அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.  

பொதுமக்கள் கூறும்போது:- இப்பகுதியில் அதிகமான செங்கல் சூளைகள் உள்ளன இவற்றில் மேற்குவங்கம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடனும், தனியாகவும் வந்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர். செங்கல் சூளை அதிபர்களுக்கு மொழி பிரச்சனை இருப்பதால், சில ஏஜென்டுகள் மூலம் வடமாநிலத்தவர்களை பணியில் அமர்த்துகின்றனர். ஆனால் பணிக்கு வருகின்றவர்கள் குற்ற பின்னணி உடையவர்களா, முகவரி சரியானதுதானா என எதையும் சரிபார்க்க முடிவதில்லை.  இதனால் திருட்டு, கஞ்சா போன்ற போதை விற்பனையிலும் இவர்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாலிபரும் மனநோயாளி போல் நடந்து கொண்டு தொடர்ந்து வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதால் காவல்துறை அதிகாரிகள் இந்த வாலிபரை தொடர்ந்து விசாரிக்க வேண்டும். மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இப்பகுதியில் வேலைக்கு வருகின்ற வட மாநிலத்தை சார்ந்தவர்களை பற்றிய தகவல்களை காவல்துறை கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


× RELATED ரயில் பாதையில் மாடு மேய்க்க தடை