×

இலவச திட்டங்களை முழுமையாக வழங்க அரசு உத்தரவு அதிகாரிகள் தீவிரம் மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன்


திருவண்ணாமலை, பிப்.14: மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான இலவச திட்டங்களை முழுமையாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதால் அதை நிறைவேற்றும் பணியில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, தேர்தல் அறிவிப்பு அடுத்த மாதம் 2வது வாரத்துக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அட்டவணையை ஆணையம் வெளியிட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும்.மேலும், தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பிறகு அரசு நலத்திட்டங்களை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படும். அத்தியாவசிய பணிகளை தவிர்த்து, புதிய திட்டங்களை செயல்படுத்துதல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இலவச திட்டங்களின் பயன்களை வழங்குதல் போன்றவை தடைபடும்.
எனவே, மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் அரசின் இலவச திட்டங்கள் உள்ளிட்ட நடப்பு நிதி ஆண்டுக்கான அரசு திட்டங்களின் ஒதுக்கீடுகளை முழுமையாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதையொட்டி, இலவச கால்நடைகள் வழங்கும் பயனாளிகள் தேர்வு, பசுமை வீடுகள் ஒதுக்கீடு, நிலுவையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள்கள் வழங்குதல். திருமண நிதி உதவித் திட்டத்துக்கு விண்ணப்பித்துள்ள பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி, முதியோர் உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.எனவே, நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் அனைத்தும் அவசர, அவசரமாக பரிசீலனை செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும், துறைவாரியாக இலவச திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விபரம், பயனாளிகள் பட்டியல், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் விபரம் போன்றவை தனித்தனியே தயாரிக்கப்பட்டு வருகிறது.மேலும், நடப்பு நிதி ஆண்டுக்கான இலக்குகளை செயல்படுத்த, அடுத்த மாதம் இறுதிவரை அவகாசம் இருந்த போதும், மக்களவை தேர்தல் வாக்குகளை மையப்படுத்தியே தமிழக அரசு இப்பணிகளை அவசர அவசரமாக நிறைவேற்றுவதாக கூறப்படுகிறது.

Tags : Government ,Election Announcement ,Lok Sabha ,
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...