×

பருவமழை கைவிட்டதால் அரிசி விலை உயரும் வாய்ப்பு சன்னரக நெல் சாகுபடி பரப்பு சரிந்தது திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி

திருவண்ணாமலை, பிப்.14: திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை பொய்த்துவிட்டதால் வறட்சி ஏற்பட்டு சன்னரக நெல் சாகுபடி பரப்பு சரிந்தது. எனவே, இந்த ஆண்டு அரசி விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.நெல் சாகுபடியில் டெல்டா மாவட்டங்களுக்கு இணையான இடத்தில், திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. அதிலும் குறிப்பாக, பொன்னி போன்ற சன்னரக நெல் சாகுபடியில் திருவண்ணாமலை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.இம்மாவட்டத்தில், பருவமழை முழு அளவு பெய்யும் ஆண்டுகளில், அதிகபட்சம் 1.20 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறும். கிணற்று பாசனத்தை நம்பியே நெல் சாகுபடி பெருமளவில் நடக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் பெய்த தொடர் மழையால், பாசன கிணறுகள் முழுமையாக நிரம்பின.எனவே, கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 1.68 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் நெல் விளைந்தது. மேலும், நவீன சாகுபடி முறையால் வழக்கமான நெல் உற்பத்தியை விட கூடுதலாக 25 சதவீதம் வரை மகசூல் கிடைத்தது என வேளாண் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்திருந்தனர்.

மேலும், கடந்த 2015ம் ஆண்டு 82 ஆயிரம் ஹெக்டரிலும், 2016ம் ஆண்டு 63 ஆயிரம் ஹெக்டரிலும், 2017ம் ஆண்டு 96 ஆயிரம் ஹெக்டரிலும் நெல் சாகுபடி நடந்தது.கடந்த ஆண்டு, சராசரி நெல் சாகுபடியை விட வெகுவாக உயர்ந்தது. எனவே, நெல் விலை வீழ்ச்சியும், அரிசி விலை கட்டுப்பாட்டிலும் இருந்தது.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பருவமழை பொய்த்திருப்பதால், இந்த ஆண்டு கடும் வறட்சி இப்போதே நிலவுகிறது. பாசன கிணறுகளில் நீரில்லை. எனவே, இரண்டாம் போக நெல் சாகுபடியே கேள்விக்குறியாகிவிட்டது.கிணற்று பாசனத்தை நம்பி சாகுபடி செய்துள்ள இந்த பட்டத்து நெல் கைக்கு எட்டுமா என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக நீண்டகால பயிரான சம்பா பொன்னி நெல் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.எனவே, சன்னரக நெல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சன்னரக பொன்னி நெல் உற்பத்தி குறைந்ததால், அரிசி உற்பத்தியாளர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில சன்னரக நெல் கொள்முதல் செய்து வருகின்றனர்.

நெல் உற்பத்தி வெகுவாக சரிந்துவிட்ட நிலையில், அரிசி விலை உயரம் நிலை ஏற்பட்டுள்ளது. சன்னரக பொன்னி அரிசி தற்போது 25 கிலோ மூட்டை ₹1,300 வரை விற்கப்படுகிறது. இதன் விலை, அடுத்த சில மாதங்களில் ₹1,400 வரை செல்லும் என விவசாயிகள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.அதேபோல், டீலக்ஸ் பொன்னி, ஏடிட்டி 36 போன்ற சாதாரண ரக அரிசி போன்றவற்றின் விலையும் அடுத்த சில மாதங்களில் உயரும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

Tags :
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...