ஆலோசனை கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு கருப்பு கொடி ஏந்தி ஊர்வலம் செய்யாறில் 8 வழி பசுமைச்சாலைக்கு எதிர்ப்பு


செய்யாறு, பிப்.14: செய்யாறில் நடந்த 8 வழி பசுமைச்சாலை ஆலோசனை கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்து கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.செய்யாறு தாலுகா அலுவலகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமை சாலைக்கு ஆட்சேபனை தெரிவித்த விவசாயிகளிடம் மாவட்ட சிறப்பு டிஆர்ஓ வெற்றிவேல் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள 11 கிராமங்களை சேர்ந்த 68 விவசாயிகளுக்கு தபால் அனுப்பினர்.
அதன்பேரில், விவசாயிகள் தங்களுடைய விருப்பத்தை அதிகாரிகளிடம் தெரிவிக்க நேற்று காலை பசுமை சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாள அருள் தலைமையில் பெண்கள் உள்பட பலர் 8 வழி பசுமை சாலைக்கு நிலம் தர மாட்டோம் என்று கூறி கருப்புக்கொடி ஏந்தி கோஷமிட்டவாறு செய்யாறு பஸ் நிலையத்திலிருந்து தாலுகா அலுவலகம் வந்தனர்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், விசாரணைக்காக வந்தவர்கள் கூட்டமாக செல்லக் கூடாது என்று கூறினர். இதையடுத்து, 57 விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்று அலுவலகத்தில் எடுத்துச்செல்ல 4 விவசாயிகள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மனுக்களை டிஆர்ஓ வெற்றிவேலிடம் வழங்கினர்.

இதற்கு டிஆர்ஓ இது மனுக்கள் பெறும் முகாம் அல்ல எனக்கூறி மனுக்களை வாங்க மறுத்து விவசாயிகள் தனித்தனியாக அனுமதிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, விவசாயிகள் விசாரணை அலுவலகத்திலிருந்து வெளியேறி முறையான நியாயம் கிடைக்காது என கூறியபடி கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஆட்சேபனை மனுக்களை பதிவு தபாலில் அனுப்பலாம் எனக்கூறி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாலை 5 மணி வரை ஒருசில விவசாயிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

× RELATED பசுமை உரக்குடிலில் உரம் தயாரிப்பு துவக்கம்