நான் இறந்தால் உடலை தானமாக வழங்க வேண்டும் முதல்வருக்கு முருகன் உருக்கமான மனு வேலூர் சிறையில் விடுதலை கோரி உண்ணாவிரதம்

வேலூர், பிப்.14: விடுதலை செய்யக்கோரி சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகன், தான் இறந்தால் உடலை தானமாக வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளதாக அவரை நேரில் சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.தங்களை விடுதலை செய்யக்கோரி வேலூர் மத்திய சிறையில் முருகனும், பெண்கள் சிறையில் நளினியும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் முருகனையும், பெண்கள் சிறையில் 5வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் நளினியையும் அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார்.அதன் பின்னர் வெளியே வந்த வழக்கறிஞர் புகழேந்தி கூறியதாவது: வேலூர் சிறையில் உள்ள முருகன் கடந்த 2ம் தேதி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கூறி சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அந்த மனுவை சிறை நிர்வாகம் ஏற்றுக்கொள்ளாமல், முருகனை டார்ச்சர் செய்தும், சிறையில் உள்ள மற்ற கைதிகளிடம் பேச விடாமல், தனிமைப்படுத்தியும் தொந்தரவு செய்துள்ளனர்.

அதோடு உண்ணாவிரதத்தை தொடர்ந்து வரும் முருகனுக்கு நேற்று கட்டாயப்படுத்தி 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றி உள்ளனர். இதற்கிடையே முருகன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு மனு எழுதி அதை அனுப்பும்படி சிறை சூப்பிரெண்டிடம் கொடுத்துள்ளார். ஆனால் அவரோ அந்த மனுவை வாங்க மறுத்து உள்ளார். உண்ணாவிரதத்தை கைவிட்டால் தான் மனுவை வாங்கி அனுப்புவேன் என்று கூறி உள்ளார்.முருகன் அளித்துள்ள அந்த மனுவில், ‘நான் இறந்த பிறகு எனது உடலை தானம் செய்ய விரும்புகிறேன். இதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். பெண்கள் சிறையில் 5வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் நளினி உடல் சோர்வுடன் உள்ளார். என்னை சந்திக்க கைத்தாங்கலாகவே அவரை அழைத்து வந்தனர். அவரும் விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: