பிஎஸ்என்எல் ஊழியர்கள் 3 நாள் வேலை நிறுத்தம் நாடு தழுவிய அளவில் 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி

வேலூர், பிப். 14:நாடு தழுவிய அளவில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் 3 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் 3 நாள் வேலைநிறுத்தம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். செயலாளர்கள் தங்கவேலு, சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 4ஜி அலைக்கற்றை சேவையை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வழங்கவேண்டும். 15 சதவீதம் ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமல் படுத்தவேண்டும். அரசு விதிகளின்படி பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெறவேண்டும்.பிஎஸ்என்எல்லின் நில மேலாண்மை கொள்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். வங்கிக்கடன் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் டவர்கள் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் சிவலிங்கம், லோகநாதன், சீனிவாசலு, துணை செயலாளர் முருகன், பொருளாளர்கள் பிச்சாண்டி, இளஞ்செழியன் ஆகியயோர் கலந்துகொண்டனர்.

Related Stories: