எல்லை பிரச்னையால் 108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் சிக்கல்

வானூர், பிப். 14:  வானூர் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால் நோயாளிகள் அவதியடைகின்றனர்.இந்தியா முழுவதும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள், விபத்துகளில் சிக்குபவர்களுக்கு இலவசமாக 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது. இந்த திட்டம் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில் புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான வானூர் வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்தால் புதுச்சேரியை தொடர்பு கொள்ளுங்கள் என்று முதலில் செய்தி வருகிறது. அவர்களுக்கு தொடர்பு கொண்டால் தமிழக பகுதியாக உள்ளதால் தமிழக 108 சேவைக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று மாறிமாறி கூறி வருகின்றனர். இதை தொடர்ந்து தமிழக 108 சேவைக்கு அழைத்தால் அவர்கள் அந்த தொலைபேசியை எடுத்து பேசாமல் அலைக்கழிக்கின்றனர். இதனால் நோயாளிகள் மற்றும் விபத்துகளில் சிக்கி படுகாயம் அடைபவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே 108 சேவை வானூர் வட்டார பகுதிகளில் தடையின்றி உடனடியாக கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானூர் வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED புதுக்கோட்டை முதல் கீரனூர் வரை...