×

தரமில்லாத சாலை மீண்டும் சீரமைப்பு

முஷ்ணம், பிப். 14: முஷ்ணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் உள்ள பழைய மருத்துவமனை தெரு, கசப்பை மற்றும் கொம்பாடித் தெரு பகுதியில் தார் சாலை அமைக்க தமிழ்நாடு நகர்புற சாலை திட்டப்பணியின் கீழ் ரூ.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தார் சாலை பணிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் அந்த சாலை தரமற்று ஜல்லிகள் பெயர்ந்து குவியல் குவியலாக சிதறி கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் சிதறி கிடக்கும் ஜல்லியில் சிக்கி தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வந்தனர்.இதனால் இச்சாலைமேல் முறையாக தார் ஊற்றி ரோடுரோலர் வாகனம் மிதித்தால் தான் சாலை முழுமையாக இருக்கும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தும் சீரமைக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தரமற்ற சாலையில் பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகளை குவியலாக கையில் எடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து கடந்த 8ம் தேதி தினகரனில் படத்துடன் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடலூர் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜா மேற்பார்வையில் உதவி பொறியாளர் சீனிவாசன், முஷ்ணம் பேரூராட்சி நிர்வாக செயலர் மல்லிகா, பணி மேற்பார்வையாளர் கணேஷ் ஆகியோர் முன்னிலையில் கசப்பை சாலையில் சிதறி கிடந்த ஜல்லிகளை சரிசெய்து மீண்டும் தார் ஊற்றி சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து பழைய மருத்துவமனை தெரு மற்றும் கொம்பாடித்தெரு சாலைகள் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.


Tags : road re-alignment ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது