பண்ருட்டி அருகே நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் மணல் லாரிகள்

பண்ருட்டி, பிப். 14: பண்ருட்டி அருகே எஸ்.ஏரிப்பாளையம் சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கடந்த 4 மாதங்களாக அரசு மணல் விற்பனை மையம் இயங்கி வருகிறது. பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றிலிருந்து அள்ளப்பட்டு இங்கு குவித்து வைத்து மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை மையத்தில் இருந்து தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் எடுத்து செல்லப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் மணல் எடுக்க வரும் லாரிகள் ஒரே நேரத்தில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது.  

மேலும் அரசு மணல் விற்பனை மையம் எதிரில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருக்கிறது. மணல் எடுத்து செல்லும் லாரிகள் தார்பாய் கொண்டு மூடப்படாமல் செல்வதால் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள்.
 எனவே இதுகுறித்து பொதுமக்கள் சம்பந்தபட்ட அதிகாரியிடம் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மணல் விற்பனை மையம் முன்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


× RELATED உடன்குடி அனல்மின்நிலைய பணிக்கு மணல்...