இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை இல்லை

சிவகங்கை, பிப். 13: சிவகங்கை மாவட்டத்தில் 2016-17ல் வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்ட அதிர்ச்சியில் இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இதுவரை இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை இல்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிகப்படியாக விவசாயம் செய்யப்படும் நெல் பயிரே, பிரதான விவசாய பியிராக உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் லேசான மழை மட்டுமே இருந்தது. வட கிழக்கு பருவமழை காலத்தில் சில இடங்களில் பெய்த கனமழையை நம்பி உழுவது, விதைப்பு உள்ளிட்ட முதற்கட்ட பணிகளை செய்த விவசாயிகள் பின்னர் மழை இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.விதைப்பு செய்த பயிர்கள் பல இடங்களில் முளைக்காமலேயே போனது. முளைத்த பயிர்கள் கருகி கால்நடைகளுக்கு இரையானது. மாவட்டம் முழுவதும் சில பகுதிகள் கூட விளையாமல் 64 ஆயிரம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்ட அனைத்து பயிர்களும் கருகி முழுமையான வறட்சி பாதிப்பு ஏற்பட்டது. வறட்சியால் பயிர்கள் கருகியதை தாங்க முடியாத அதிர்ச்சியில் 2016 மற்றும் 2017ம் ஆண்டு தொடக்கத்தில் மானாமதுரை அருகே கணபதியேந்தல் கருப்பையா, காளையார்கோவில் அருகே நெடுங்குளம் முடியப்பன் (75), இளையான்குடி அருகே தெற்குசமுத்திரம் பஞ்சவர்ணம் (60), முனைவென்றி செல்வக்குமார் (41), துகவூர் சுப்பிரமணியன் (70) ஆகிய ஐந்து விவசாயிகள் மரணமடைந்தனர்.இது வரை இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘பயிர் கருகியதால் அதிர்ச்சியால் இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டிற்கு மேல் ஆன நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இறந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

× RELATED சன்னி லியோன் குடும்ப பெண்ணா...? கணவரே...