×

திருவடி மிதியூரில் காட்சி பொருளாய் தண்ணீர் தொட்டி

திருவாடானை, பிப்.13: திருவாடானை அருகே திருவடி மிதியூரில் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 6 மாதங்களாக குடிதண்ணீர் வினியோகம் இல்லாமல் தண்ணீர் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கல்லூர் ஊராட்சியை சேர்ந்த திருவடி மதியூரில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு திருவாடானையில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தண்ணீர் தொட்டி ஒன்று நிறுவப்பட்டு குடிநீர் விநியோக ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல் நாள் மட்டும் இந்த தொட்டியில் தண்ணீரை நிரப்பி வினியோகம் செய்தனர். அதன் பிறகு ஒருநாள் கூட எங்கள் குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் வரவே இல்லை.
இதுகுறித்து ஆதிதிராவிட குடியிருப்பு மக்கள் கூறுகையில், எங்கள் குடும்பங்களுக்கு என தனியாக தண்ணீர் தொட்டி நிறுவி தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரே ஒரு நாள் மட்டும் தண்ணீர் விநியோகம் செய்து விட்டு அதன்பிறகு அப்படியே போட்டு விட்டனர். இதனால் நாங்கள் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் பல மைல் தூரம் தலையில் குடங்களை சுமந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். எங்களை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. பலமுறை இது பற்றி கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.

Tags : Tiruvai Maidur ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை