மாவட்டம் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுமானத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை

திருமங்கலம், பிப். 13: திருமங்கலத்தில் புதிதாக கட்டப்படவுள்ள பஸ்ஸ்டாண்டிற்கு தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாததால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.மதுரை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக திகழும் திருமங்கலத்தில், தொலை தூர ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்க தனியாக பஸ்ஸ்டாண்ட் இல்லை. மதுரை மெயின்ரோட்டில் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பஸ்கள் வரிசையாக நின்று, தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் திருமங்கலம் நகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.தொலைதூர ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்க தனியாக பஸ்ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் மற்றும் நகர மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து திருமங்கலம் நகராட்சி மதுரை-விருதுநகர் நான்குவழிச்சாலையில் 7 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ்ஸ்டாண்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு 25 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.புதிய பஸ்ஸ்டாண்ட்டிற்கான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மட்டுமின்றி பொதுமக்களும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் தமிழக அரசின் பட்ஜெட்டில் புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுமானத்திற்கு நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. மாறாக திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் குறித்த அறிவிப்பு மட்டுமே வந்தது. இதனால் நகராட்சி நிர்வாகம், பொதுமக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.நகருக்கு தீராத தலைவலியாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை எப்படி தீர்ப்பது என நகராட்சி அதிகாரிகள், போலீசார் புலம்ப துவங்கியுள்ளனர்.

Related Stories: