திண்டுக்கல்-மதுரை சாலையில் அசுர வேக வாகனங்களால் அடிக்கடி நடக்குது விபத்து நடவடிக்கை பாயுமா?

செம்பட்டி, பிப்.13: திண்டுக்கல்-மதுரை நான்குவழிச் சாலை முக்கிய நெடுஞ்சாலையாக இருப்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இத்தடத்தில் செல்கின்றன. மெட்டூர்-செம்பட்டி வழியே செல்ல வேண்டிய தனியார் வாகனங்கள் மட்டுமின்றி, 90 சதவீத அரசு புறநகர் பஸ்களும் இத்தடத்தில் பயணிக்கின்றன. திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு புறப்படும் தனியார் பஸ்கள் நகரை விட்டு வெளியேற அதிகளவு நேரம் எடுத்துக்கொள்கின்றன.
கூடுதல் பயணிகளை ஏற்றுவதற்காக நேரத்தை கண்டுகொள்வதில்லை. இதில் விரயமாகும் நேரத்தை ஈடு செய்வதற்காக, நான்கு வழிச்சாலையில் அசுர வேகத்தில் பஸ்களை இயக்குகின்றனர். பஸ்கள் மட்டுமின்றி கூடுதல் சக்கரங்கள் பொருத்தப்பட்ட கண்டெய்னர் உள்ளிட்ட சரக்கு வாகனங்களும், அதிவேக போட்டி பயணத்தை மேற்கொள்கின்றன. சில நேரங்களில் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள், நடுரோட்டிலும், ரோட்டோரங்களில் கவிழ்வது, மீடியனை சேதப்படுத்துதல் என விபத்துக்களை நடந்து வருகின்றன.இப்பிரச்னையால் நான்கு வழிச்சாலையில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பஸ்சில் பயணிப்போர் மட்டுமின்றி, ரோட்டில் பிற வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்களின் கட்டுப்பாடற்ற வேகத்தை தவிர்க்க, போலீஸ், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு, நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

× RELATED திருச்சி- திண்டுக்கல்...