×

வசூல் வேட்டை நடத்துகின்றனர் ஆர்டிஓ ஆபீஸில் புரோக்கர் ராஜ்ஜியம் பொதுமக்கள் புகார்

பழநி, பிப்.13: பழநி வட்டார போக்குவரத்து அலுவலகம் புரோக்கர்களின் பிடியில் உள்ளது. இவர்களை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்களுக்கு நம்பர் கொடுப்பது, ஓட்டுநர் உரிமம் வழங்குவது, வாகன தகுதிச் சான்றிதழ் வழங்குவது போன்ற பணிகள் நடைபெறும். இதற்காக வாகன ஓட்டிகள் அரசிற்கு செலுத்த வேண்டிய தொகைகள் மிகவும் குறைவானவையே ஆகும். ஆனால், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் முன்பு சுற்றித்திரியும் புரோக்கர்கள் இவைகளுக்காக அதிக அளவில் கட்டணங்களை வசூலித்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். புரோக்கர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து பழநியைச் சேர்ந்த ஆனந்தன் கூறுகையில், ‘‘வாகன லைசென்ஸ் எடுப்பதற்கு முன்பு எல்.எல்.ஆர் போட வேண்டும். இதில் பைக்கிற்கு ரூ.240ம், காருக்கு ரூ.430 மட்டும் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. ஆனால், வாகன ஓட்டிகளை வழிமறிக்கும் புரோக்கர்கள் அவர்களிடம் இதற்காக ரூ.2 ஆயிரம் அளவிற்கு வசூலித்து விடுகின்றனர். அதுபோல் ஒவ்வொரு கட்டணத்திற்கும், இவர்கள் வசூலிக்கும் தொகைக்கும் சம்மந்தமே இருக்காது. குறைந்தபட்சம் 5 மடங்கு கூடுதலாக வசூலித்து விடுகின்றனர். ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிப்பு இருந்தாலும், அது எளிதாக இருப்பதில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் உரிய விளக்கம் சொல்வதில்லை. இதனால் வேறு வழியின்றி புரோக்கர்களை நாடிச் செல்ல வேண்டி உள்ளது. அலுவலகத்திற்குள்ளேயே புரோக்கர்களின் நடமாட்டம் தாராளமாக உள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தாலே இதன் உண்மை தெரியும். எனவே அலுவலகத்தில் புரோக்கர்கள் ராஜ்ஜியத்தை அதிகாரிகள் தடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : hunt ,Broker Kingdom ,RTO Office ,
× RELATED கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு...