செய்யாறில் பிரசித்திபெற்ற வேதபுரீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி பிரமோற்சவ தேரோட்டம் : திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

செய்யாறு, பிப்.13: பிரசித்திபெற்ற செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில் ரதசப்தமி பிரமோற்சவ விழாவின் 7ம் நாளான நேற்று நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பாடல்பெற்ற ஸ்தலமான செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் தை மாத ரதசப்தமி பிரமோற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், பிரமோற்சவத்தின் 6ம் நாளான நேற்றுமுன்தினம் காலை 63 நாயன்மார்களுடன் சந்திரசேகர சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 7ம் நாளான நேற்று கோயில் நிர்வாகம் சார்பில் வெகுவிமரிசையாக தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘அரோகரா’ முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  இன்று (புதன்கிழமை) 8ம் நாள் காலை சந்திரசேகர சுவாமி திருவீதி உலாவும், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெற உள்ளது.

× RELATED தொழுப்பேடு அருகே தண்டு மாரியம்மன் கோயில் திருவிழா