சேத்துப்பட்டில் பரபரப்பு 8 வழி பசுமை சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டு, பிப்.13: சென்னை- சேலம் 8 வழிச்சாலை ஆட்சேபனை மனு வழங்கிய விவசாயிகளிடம் டிஆர்ஓ வெற்றிவேல் நேரடி விசாரணை நடத்தினார். அப்போது நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை- சேலம் 8 வழி பசுமைச்சாலைக்கு ஆட்சேபனை மனுக்கள் வழங்கிய விவசாயிகளிடம் நேற்று தனி டிஆர்ஓ வெற்றிவேல் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆத்திரை உலகம்பட்டு, கொலக்கரவாடி உட்பட 12 கிராமங்களை சேர்ந்த 74 பேருக்கு விசாரணைக்கான மனு அனுப்பப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விவசாயிகள் நேரில் தங்களுடைய விருப்பத்தை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் 8 வழிச்சாலை  அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் 5 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் 5 பெண்கள் உட்பட 27 பேர் 8 வழிச்சாலைக்கு நிலம் தரமாட்டோம் என்றுக்கூறி கருப்புக்கொடி ஏந்தி கோஷமிட்டவாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அலுவலகத்தில் இருந்த 8 வழிச்சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் அபிராமன் தலைமையில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுத்து இரு அமைப்பினரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து ஆட்சேபனை மனு விசாரணைக்காக வந்தவர்கள் தவிர விசாரணை இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்காததால் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து 27 பேர் மட்டும் பங்கேற்று தங்கள் கருத்தை டிஆர்ஓ வெற்றிவேலிடம் தெரிவித்தனர். செய்யாறு கலால் டிஎஸ்பி அசோக்குமார், இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தொடர்ந்து மாலை 5 மணி வரை விசாரணை நடைபெற்றது.

× RELATED மாவட்டம் மேய்ச்சல் நிலம் கருகி...