மூதாட்டியிடம் 15 சவரன், பணம் நூதன திருட்டு பெண் உட்பட 3 பேருக்கு வலை திருவண்ணாமலையில் துணிகரம்

திருவண்ணாமலை, பிப்.12: திருவண்ணாமலையில் மூதாட்டியிடம் ₹2 லட்சம் மதிப்புள்ள 15 சவரன் நகை, பணத்தை நூதன முறையில் திருடிச்சென்ற பெண் உட்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் பூந்தமல்லி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(38). இவர் கடந்த மாதம் 24ம் தேதி காலை 7.30 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை தனது தாயார் ஜானகியிடம்(69) கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். அன்று காலை 9.30 மணியளவில் அடையாளம் தெரியாத 2 ஆண்கள், ஒரு பெண் வந்தனர். அவர்கள் ஜானகியிடம் `உங்கள் கணவருக்கு நாங்கள் ₹250 தர வேண்டும் என்று கூறி ₹500 நோட்டை கொடுத்தனர். அதற்கு ஜானகி தன்னிடம் சில்லரை இல்லையே? என்று கூறி உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தக்காளி வியாபாரியிடம் ₹40க்கு தக்காளி வாங்கி அதை ஒரு கவரில் போட்டு, மீதி பணம் ₹210 பணம் மற்றும் தக்காளியையும் ஜானகியிடம் கொடுத்துவிட்டு 3 பேரும் சென்றுவிட்டனர். தக்காளியை வீட்டில் வைத்துவிட்டு, வீட்டின் வெளியே ஜானகி இருந்துள்ளார்.பின்னர் சிறிதுநேரம் கழித்து அந்த மர்ம பெண் மட்டும் வந்து ஜானகியிடம் `எனது செல்போனை உங்களிடம் கொடுத்த தக்காளி கவரில் வைத்துவிட்டேன். உங்கள் வீட்டு சாவியை கொடுங்கள். எனது செல்போனை எடுத்துக்கொண்டு சாவியை உங்களிடம் கொடுத்து விடுகிறேன்' என்று கூறி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜானகி அந்த பெண்ணிடம் தனது வீட்டுசாவியை கொடுத்துள்ளார். பிறகு சிறிது நேரம் கழித்து அந்த பெண் செல்போனை எடுத்துக்கொண்டேன் என்று கூறி, ஜானகியிடம் சாவியை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.இந்நிலையில் செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் ஜானகி பீரோவை திறந்தார். அங்கு பீரோவில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள், ₹35 ஆயிரம் ஆகியவற்ைற காணவில்லை. வீட்டினுள் வந்த அந்த மர்ம பெண் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, திருவண்ணாமலை தாலுகா போலீசில் கடந்த 9ம் தேதி ஆறுமுகம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை, பணத்தை நூதன முறையில் திருடி சென்ற பெண் உட்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

× RELATED திருப்போரூரில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து 25 சவரன், பணம் கொள்ளை