கணவர் உட்பட 5 பேருக்கு வலை வேட்டவலம் அருகே 2ம் திருமணத்தை தட்டிக்கேட்ட

வேட்டவலம், பிப்.12: வேட்டவலம் அருகே 2வது திருமணத்தை தட்டிக்கேட்ட மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற கணவர் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஜமீன்அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(42). இவர் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி அருள்சுபா(35). இவர்களுக்கு திருமணமாகி 18 வருடம் ஆகிறது. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் கண்ணன் பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். ஆனால், அவர் தனது கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி என்ற பெண்ணை கடந்த மாதம் 14ம் தேதி 2வது திருமணம் செய்துள்ளார். இதையறிந்த அருள்சுபா தனது மகளை அழைத்துக்கொண்டு ஜமீன்அகரத்திற்கு சென்றுள்ளார். பின்னர், அருள்சுபா இரண்டாவது திருமணம் குறித்து கனவரிடம் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கண்ணன், அருள்சுபாவை சரமாரி தாக்கினாராம். மேலும் கண்ணனின் சகோதரர்கள் சக்திவேல், தட்சிணாமூர்த்தி மற்றும் உறவினர்கள் அபிராமி, தமிழ்வாணன் ஆகியோரும் அருள்சுபாவை தாக்கியதாக தெரிகிறது.

தகராறின்போது கண்ணன் பெட்ரோல் எடுத்து அருள்சுபா மீது ஊற்றி தீ வைத்தாராம். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து, அருள்சுபா வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் விசாரணை நடத்தினார். விரணையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எஸ்பி சிபிசக்ரவர்த்திக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சை ஆயுதப்படைக்கு மாற்ற எஸ்பி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.பின்னர், அருள்சுபா கொடுத்த புகாரின்பேரில் கண்ணன், சக்திவேல், தட்சணாமூர்த்தி, தமிழ்வாணன், அபிராமி ஆகிய 5 பேர் மீது வேட்டவலம் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகிறார்.

× RELATED தீக்குளித்த மனைவி சாவு காப்பாற்ற முயன்ற கணவரும் பரிதாப பலி