செலவோ 13 லட்சம்.. ஆட்களே வராததால் மாணவர்கள் ஏமாற்றம்... கண் துடைப்பிற்காக நடத்தப்படும் அறிவியல் கண்காட்சி கல்வி நிர்வாகம் மீது மக்கள் குற்றச்சாட்டு

அரியலூர்.பிப்.7: அரசு பள்ளியில் ரூ.13 லட்சம் செலவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பார்வையாளர்கள்  இல்லாமல் மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். கண் துடைப்பிற்காக  கண்காட்சி நடத்துவதாக மாவட்ட கல்வி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டினர். அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட தலைநகரில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி திறந்து வைத்தார். இந்த அறிவியல் கண்காட்சியில் 50 பள்ளிகளிலிருந்து வைக்கப்பட்டிருந்த 128 அறிவியல் படைப்புகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் அரசு வழங்கியுள்ளது.
ஆனால், இந்த அறிவியல் கண்காட்சியில் வெறும் ரூ.10 சார்ட்டில் பள்ளியின் பெயரும், தூய்மை பாரதம் என்ற வரியும், மாணவியின் பெயரும் மட்டுமே எழுதி அதை அறிவியல் கண்காட்சியில் வைத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்டு சிறிய பொருட்களை கொண்டு பெயர் அளவிற்கான கண்காட்சியை அரியலூர் கல்வி மாவட்டம் நடத்தியது. அரசு பணத்தை கொடுத்து அறிவியல் படைப்புகளை செய்து மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு ஒவ்வொரு அறிவியல் படைப்பிற்கும் ரூ.10ஆயிரம் வழங்குகிறது. ஆனால் ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளுக்கு கண்காட்சிக்காக வழங்கப்படும் பணத்தை மாணவர்களின் அறிவியல் படைப்பிற்கு வழங்காமல் சொற்ப ரூபாய்களை கொண்டு ஒரு சில பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.

 அதனால் மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் வாங்கி கொடுத்த பொருட்களை கொண்டு அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டனர். மேலும் அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சியில் வைத்துள்ள படைப்பில் ஒரு சார்ட் பேப்பர் மற்றும் ஒரு பிளாஸ்டிக்  தண்ணீர் பாட்டில், ஒரே ஒரு சிறிய பேட்டரி செல் இவை அனைத்தும் ரூ.100க்குள் வாங்கிவிட்டு ரூ.10 ஆயிரத்திற்கு வாங்கியதாக கணக்கு காட்டியுள்ளனர்.
 அதுபோல் கள்ளூரை சேர்ந்த பள்ளியில் இக்கண்காட்சியில் 3 படைப்புகள் வைத்துள்ளனர். வெறும் தானியங்களை 50 கிராம் அளவில் சுமார் 30 வகையாக தானியங்களை வைத்துள்ளனர். இவையும் சில நூறு ருபாய்களை தாண்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் அதிகமான பள்ளிகள் குறைந்த அளவே செலவு செய்து அறிவியல் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மேலும் இக்கண்காட்சி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்ப்பதற்காக வைத்தது போல் இல்லை.  அரசு அறிவியல் கண்காட்சி நடத்துங்கள் என்று பணத்தை கொடுக்கிறது. அந்த பணத்தை செலவு செய்ததாக கணக்கு காட்டி பெயரளவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. அறிவியல் படைப்புகளை வைத்துக்கொண்டு மாணவ, மாணவிகள் மட்டுமே அமர்ந்திருந்தனர். இந்த அறிவியல்  கண்காட்சிக்கு பார்வையாளராக எவரும் வராததால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர்.  மாணவர்களின் அறிவியல் படைப்பிற்காக கொடுக்கப்படும் பணம் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறதா அல்லது பள்ளி நிர்வாகமே எடுத்துக்கொள்கிறதா என்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி மாணவர்களில் அறிவியல் வளர்ச்சிக்கு அரசு கொடுக்கும் பணத்தை முழுமையாக செலவு செய்து மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும்  என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

× RELATED மாணவ,மாணவிகளை அங்கீகாரமற்ற பள்ளியில் சேர்க்க கூடாது