அரியலூர் அருகே இருதரப்பினரிடையே கடும் மோதல் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு

அரியலுார், ஜன.31:  அரியலூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதல் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் கீழக்குளத்தூர் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேஸ்வர்மா(22), சித்திரவேல்(22), கார்த்திக்(23), மற்றும் அவரது நண்பர்கள் ஊரின் கடை வீதியில் நின்று கொண்டிருந்தனர். அதே ஊர் தெற்கு தெருவை சேர்ந்த விஜய் (19), ராகுல் (22)ஆகியோர் டூவீலரில் வேகமாக சென்றதாக தெரிகிறது.  அப்போது, அவர்களிடம் ஏன் இப்படி வேகமாக செல்கிறீர்கள் என ராஜேஸ்வர்மாவும், சித்திரவேலும் கேட்டுள்ளனர். இது இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் விஜய் தரப்பினர், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து ராஜேஸ்வர்மா, சித்திரவேல் மற்றும் அவர்களது நண்பர்களையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராஜேஸ்வர்மா, மேலும் அவரது நண்பர்கள் மற்றும் இன்னொரு தரப்பை சேர்ந்த விஜய், ராகுல் ஆகியோர் தஞ்சை மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கீழப்பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் போலீசார், அம்பேத்கர்நகரை சேர்ந்த ராஜேஸ்வர்மா தரப்பினர் மீது மட்டும் வழக்கு போட்டு விட்டு, மற்றொரு தரப்பான விஜய் தரப்பினர் மீது வழக்கு போட்டதாக தெரிகிறது.

 மேலும் போலீசார் அம்பேத்கர் நகரில் புகுந்து மற்றவர்களை தேடுவதாகவும் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வர்மா தரப்பை சேர்ந்த அம்பேத்கர் நகர் மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமானூர் ஒன்றிய செயலாளர் சுள்ளங்குடி கண்ணன் தலைமையில் மாவட்ட செயலாளர் செல்வநம்பி, மாநில துணை செயலாளர் அன்பானந்தம், அரியலூர் தொகுதி செயலாளர் மருத வாணன், துணை செயலாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கீழப்பழூர் போலீசாரை கண்டித்து போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர்.   சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் டி.எஸ்.பி மோகன்தாஸ், போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து சம்மந்தபட்டவர்கள் கைது செய்யபடுவார்கள் என தெரிவித்தார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாம் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என ௯றியதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.

× RELATED டெல்லியில் இரு தரப்பினருக்கு இடையே...