×

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம்

திருச்சி, ஜன.23: ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தால் வருவாய் மற்றும் ஊராட்சி அலுவலகங்கள், பள்ளி நிர்வாகங்கள் முடங்கின.  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சார்பில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வட்ட அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  அதன்படி திருச்சி கிழக்கு, மேற்கு வட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்பாபு, மோகனா, சேசு அமல்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 750க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல் திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, தொட்டியம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவெறும்பூரில் தொடக்கக் கல்வி அலுவலகம் முன் தமிழக ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் அந்தோணி எஸ்தர்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன், தமிழக முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோபிநாதன், பார்த்திபன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.  திருச்சியை பொறுத்தவரை 14,062 ஆசிரியர்கள், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். மாநகரில் செங்குளம் பள்ளி உள்பட 4 பள்ளிகள், புறநகரில் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டன. சில பள்ளிகளில் மதிய உணவுக்கு பிறகு மாணவ, மாணவிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். திருச்சி கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

அரசு எச்சரிக்கையையும் மீறி வேலைநிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளதால், அரசு சார்ந்த பணிகள் முடங்கி கிடக்கின்றன. பள்ளிகளில் வகுப்புகள் நடத்தாமல் மாணவ, மாணவியர் அமர வைக்கப்பட்டிருந்தனர். இன்றும், நாளையும் மாவட்டம் முழுவதும் வட்ட அளவில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. தொடர்ந்து 25ம் தேதி மாவட்ட தலைநகரில் பெருந்திரள் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தொட்டியம்:  தொட்டியம்  வாணப்பட்டறை மைதானத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ  அமைப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. வட்டார  ஒருங்கிணைப்பாளர்கள் பிரசன்னவெங்கடாச்சலம், வள்ளுவன், ஜெயக்கொடி ஆகியோர்  போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர். நிர்வாகிகள் சவுந்தர்ராஜன்,  சிவக்குமார், ரவீந்திரன், நடராஜன், நாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை  வலியுறுத்தி பேசினர்.

தா.பேட்டை:  முசிறி கைகாட்டியில்  ஜாக்டோஜியோ சார்பில் முசிறி, தா.பேட்டை ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் அரசு  ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட  ஒருங்கினைப்பாளர் சந்திரசேகரன், மாநில ஒருங்கினைப்பாளர் நாகராஜா,  நிர்வாகிகள் விஜயகுமார், இளங்கோ, தண்டபாணி, வெண்ணிலா, இளமாறன் உள்ளிட்ட  பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முசிறி, தா.பேட்டை ஒன்றிய  பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.  முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையிலான போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்தனர்.

லால்குடி: லால்குடியில் நேற்று நடந்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட  தலைவர் அருண்ராஜன், வட்டார செயலாளர் தாமஸ்ஜெயசீலன், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், சத்துணவு அங்கன்வாடி மாவட்ட செயலாளர் ஜெயராஜ், உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட இணை செயலாளர் விக்டர் ஜோசப், வட்டார செயலாளர் மகேஸ்குமார் உட்பட 200க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் லால்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கவில்லை.

7,239 பேர் ஆப்சென்ட்
திருச்சி மாவட்டத்தில் வருவாய், கல்வி என 48 துறைகள் உள்ளன. இதில், 14,935 ஆசிரியர்கள் 24,062 அரசு ஊழியர்கள் என 38,997 பணியிடங்கள் உள்ளன. இதில், 14,062 ஆசிரியர்கள், 18,193 அரசு ஊழியர்கள் தற்போது பணியில் உள்ளனர். இதில், 6,428 ஆசிரியர்கள், 811 அரசு ஊழியர்கள் என மொத்தம் 7,239 பேர் பணிக்கு வரவில்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. அதாவது 22.4 சதவீதம் பேர் மட்டும் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளது.

Tags :
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி