×

தெப்ப தேரோட்டத்தில் உயிரிழந்த வாலிபர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டம் ஜிஹெச்சில் பரபரப்பு

மதுரை, ஜன.23:  தெப்ப திருவிழா தேரோட்டத்தில் வடத்தில் சிக்கி பலியான வாலிபரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை அனுப்பானடி தெய்வகன்னி தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (19). கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் வண்டியூர் தெப்பத்திருவிழாவில் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தார். அப்போது வடத்தில் சிக்கி உயிரிழந்தார். நேற்று காலை பிரவீன்குமாரின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்தது. இதனையொட்டி, பிரவீன்குமாரின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் பிணவறை முன் திரண்டனர். பிரவீன்குமாரின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இந்து சமய அறநிலைத்துறையில் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து டவுன் உதவி போலீஸ் கமிஷனர் உதயகுமார் தலைமையில் தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, வடக்கு துணை தாசில்தார் திருநாவுக்கரசு, விஏஓ ஜெகதீஷ்குமார், மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சமரசம் ஏற்பட்டதையடுத்து உறவினர்கள் உடலை வாங்கிச் ெசன்றனர்.  மீனாட்சி கோயில் இணை ஆணையர் நடராஜன் கூறும்போது, ‘‘தெப்பத்திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 50 பேருக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளோம். இந்த இழப்பீட்டு தொகை பிரவீன்குமார் குடும்பத்தினருக்கு கிடைக்கும். மேலும் இவர்களது கோரிக்கைகள் இந்துசமய அறநிலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும்’’ என்றார்.

Tags : Relatives ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...