×

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கழிவு பஞ்சு விற்க நடவடிக்கை

கோவை, ஜன.23:  கழிவு பஞ்சிற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் சந்தை கட்டணத்தை நீக்க வேண்டும் அல்லது அவற்றை  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டும், என்று கழிவு பஞ்சு நூற்பாலைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 இதுகுறித்து தமிழக ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் (ஓஸ்மா) தலைவர் ஜெயபால் கூறியதாவது: வேளாண் விளை பொருள் பட்டியலில் பருத்தி, பஞ்சு, நெல், சோளம், கம்பு, ராகி, தேங்காய், கொப்பரை, கரும்பு, வர மிளகாய், மஞ்சள், எள், நிலக்கடலை, வெல்லம் உள்ளிட்ட 15 பொருட்கள் இடம் பெற்றுள்ளது. இவை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும், இதர சந்தைகளிலும் விற்பனை செய்யக்கூடிய பொருட்களாகும். இவற்றிற்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஒரு சதவீத சந்தை கட்டணம் (செஸ் வரி) வசூலித்து வருகிறது.
 இந்நிலையில், பஞ்சை கொண்டு நூல் தயாரிக்கும் நூற்பாலைகளில் வெளியேறும் கழிவு பஞ்சை, நூற்பாலைகளில் இருந்து தமிழகத்திலுள்ள 425 ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் வாங்கி, அதை சுத்தப்படுத்தி நூல் தயாரித்து வருகிறது. இத்தகைய நூல்மூலம் விசைத்தறி துணி மற்றும் ஜீன்ஸ் துணிகள், கைலி, தலையணை, போர்வை, ஜமுக்காளம், மிதியடி உள்ளிட்ட வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு கழிவு பஞ்சை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி, சுற்றுச்சூழலுக்கு துணை புரியும் வகையில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. இத்தகைய மில்கள் நூற்பாலைகளில் இருந்து வாங்கும் கழிவு பஞ்சிற்கும் வேளாண் வணிக துறை சந்தை கட்டணம் வசூலித்து வருகிறது.
வேளாண் விளைபொருளும் அல்லாத சந்தை பொருளாகவும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலோ, சந்தையிலோ விற்கப்படாத கழிவு பஞ்சிற்கு சந்தை கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது. கழிவு பஞ்சிற்கு முறையின்றி சந்தை கட்டணம் வசூலிப்பதை விலக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரி வருகிறோம். ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு பின்னரும் கடந்த ஒன்றரை ஆண்டாக சந்தை கட்டணம் நடைமுறையில் உள்ளது. இது கூடுதல் செலவாக உள்ளது.
இதனால் கழிவு பஞ்சிற்கு சந்தை கட்டணத்தை நீக்க வேண்டும், அல்லது அவற்றை  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலமோ, சந்தையிலோ விற்பனை செய்ய நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு ஜெயபால் கூறினார்.




Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்