×

ரூ.ஒரு கோடி நகை கொள்ளை வழக்கு இதுவரை 16 பேர் கைது

கோவை, ஜன.23: கோவையில் ரூ.ஒரு கோடி நகை கொள்ளை வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 619 கிராம் தங்கம் நகை, 251 கிராம் வைர நகை மீட்கப்படவில்லை. கேரள மாநிலத்திலிருந்து, கோவை நகைக்கடைக்கு கடந்த 7ம் தேதி மதியம் காரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 3,107 கிராம் நகைகள், வைரம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொண்டு வரப்பட்டது. கோவை க.க சாவடி அருகே கார் வந்த போது 2 காரில் வந்த மர்ம கும்பல் நகைகளை கொள்ளையடித்தது.
இது தொடர்பாக கந்தே கவுண்டன் சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கோவை மாவட்ட எஸ்.பி பாண்டியராஜன் உத்தரவில் டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கார்த்திகேயன், பாலமுருகன், விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த வழக்கில் ெதாடர்புடைய வேலூர் கொணவட்டம் சொர்க்கப்பன் நகரை சேர்ந்த ஜெயபிரகாஷ் (34), செம்பாக்கம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (24) ஆகிய 2 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களை கோவை கந்தே கவுண்டன் சாவடி போலீசார் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். இவர்களிடமிருந்து 500 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது. இந்த வழக்கில் கொள்ளை கும்பல் தலைவரான ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த பைரோஸ் (29), கேரளா மாநிலத்தை சேர்ந்த கண்ணன் (38), ஹபீப் (41), ரின்சாத் சித்திக் (24), விபின் சங்கீத் (28), ரெனூப் (34), வேலூரை சேர்ந்த எம்.பைரோஸ் (23),அத்திக் பாஷா (21), ராஜசேகரன் (33),ரிஸ்வான் செரீப் (21), பெங்களூரை சேர்ந்த மெகபூபாஷா (26), சாதிக் உசேன் (25), சையது நயீம் (24),அப்துல் ரகீம் (25) ஆகிய 14 பேர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2,488 கிராம் தங்கம், வைர நகைகள், 243 கிராம் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டது. இன்னும் 619 கிராம் தங்க நகைகள், 251 கிராம் வைர நகைகள் மீட்க வேண்டியுள்ளது. கொள்ளை கும்பல் தலைவர் பைரோஸ் தனது அண்ணன் சலீம் (32), தாய் சமா (57) ஆகியோரிடம் இந்த நகைகளை கொடுத்து விட்டதாக தெரிகிறது. இவர்கள் ஆந்திர மாநிலம் திருமலை போலீசில் சில நாட்களுக்கு முன் சிக்கினர். இவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்கு இருப்பதாக தெரிகிறது. இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இவர்களிடமிருந்த நகைகள் எங்கே போனது என தெரியவில்லை. நகைகள் சிலவற்றை திருமலை போலீசார் பறித்து விட்டதாகவும் புகார் எழுந்தது. குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தும் கோவை மாவட்ட போலீசாரால் நகைகள் முழுவதும் மீட்க முடியவில்லை. சலீம், சமா ஆகியோரை கோவை போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்து நகைகளை மீட்க திட்டமிட்டுள்ளனர்.

Tags :
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்