×

கோவை தொழிற்சாலைகளில் கேரள போலீசார் திடீர் சோதனை

சூலூர்.ஜன.23: கேரளாவில் சமீபத்தில் வரலாறு காணாத  மழை  பெய்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலம் முழுக்க பலத்த பாதிப்பு ஏற்பட்டது.  கேரள மாநிலத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்குகளில் இருந்த பல்லாயிரக் கணக்கிலான டன் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற தானியங்கள் முழுவதுமாக மழையில் நனைந்து வீணாகின. அதைத்தொடர்ந்து கேரள அரசு சேமிப்புக் கிடங்குகளில் இருந்த  ஆயிரக்கணக்கான டன் தானியங்கள் அனைத்தையும் அழித்துவிட கேரள அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கேரள அரசு அழிக்க உத்தரவிட்ட தானியங்களை அழிக்காமல் தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள கால்நடைத் தீவன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடத்தி வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டதாக  தகவல் பரவியது. மேலும் கேரள அரசு உத்தரவின்படி அரசு  சேமிப்புக்கிடங்கு அதிகாரிகள் வீணான தானியங்களை எந்த வகையில் அழித்தனர் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என கூறப்படுகிறது. அதற்கான டெண்டர் விடப்பட்டதா, கெட்டுப்போன தானியங்கள் எவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டது போன்ற எந்த ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வைத்திருக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் தானியங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்த கேரள அரசு,  போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கோவையில்  சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் கோழித்தீவனம் தயாரிக்கும் ஆலைகள் பல உள்ளது. இந்த ஆலைகளில் கேரள தானியங்கள் கடத்திவரப்பட்டு பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கேரள போலீஸ் தனிப்படையினர் பாலக்காடு இன்ஸ்பெக்டர் அன்சார் தலைமையில் சூலூர் வந்தனர். அவர்கள் சூலூர் போலீசார் உதவியுடன் பாப்பம்பட்டி பகுகளில் உள்ள கோழித்தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் சோதனை செய்தனர். கேரள போலீசார் சூலூரில் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Kerala ,police raids ,factory ,Coimbatore ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...