×

புறநகர் பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் பாதிப்பு: ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி

தாம்பரம், ஜன. 23: குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஜாக்டோ-ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். இதில், சிட்லப்பாக்கம் மற்றும் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கவும், அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், வாகன ஓட்டுனர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ - ஜியோ செய்தி தொடர்பாளர் தியாகராஜன் கூறுகையில்,‘‘தமிழகத்திலே பல பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு இருகிறது. அரசு அலுவலகங்கள் காலியாக இருகிறது. இதற்கு எல்லாம் காரணம் இன்றைக்கு ஆரம்பித்து இருக்கின்ற தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம். மூன்று ஆண்டுகளாக எங்கள் கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருகின்றோம். தொடர்ந்து எங்களை இந்த அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவோம் என்று கூறியவர்கள், இன்று அந்த கோரிக்கையை மறந்துவிட்டு அந்த கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

தேர்தலின்போது இவர்கள் கொடுத்த வாக்குறுதிகளைத்தான் நாங்கள் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றோம். இதே நிலை தொடர்ந்தால் ஒட்டுமொத்த பள்ளிகளையும் இழுத்து மூடுவோம். எங்கள் 9 அம்ச கோரிக்கைகளை ஒன்று விடாமல் நீங்கள் நிறைவேற்றினால் மட்டும் தான் இந்த போராட்டத்தை நாங்கள் விலக்கிக்கொள்வோம். அது தவிர நீங்கள் எத்தனை அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்களை விடுத்தாலும் எங்களுடைய போராட்டம் தொடரும்’’ என்றார்.

Tags : government schools ,suburbs ,strike ,fight ,teachers ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்