×

மெட்ரோ ரயில் பணியால் பாதிப்படைந்த விக்டோரியா ஹால் சீரமைப்புக்கு ₹1.56 கோடி ஒதுக்கீடு: ஏப்ரலில் பணிகள் தொடக்கம்

சென்னை, ஜன.23: மெட்ரோ ரயில் பணிகளால் பாதிப்படைந்த விக்டோரியா பப்ளிக் ஹால் சீரமைப்பு பணிக்கு ₹1.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் ரிப்பன் மாளிகைக்கு இடையில் விக்டோரியா பொது மண்டபம் அமைந்துள்ளது.  129 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மண்டபம்  இந்தோ சாரோசானிக் முறையில் கட்டப்பட்டது. 25 ஆயிரம் சதுர அடி கொண்ட மண்டபத்தின் கீழ் பகுதியில் 400 பேரும், மேல் பகுதியில் 350 பேரும் அமரலாம். இதில் நாடக நிகழ்ச்சிகளும், படம் திரையிடல்களும் நடந்து வந்தன. இந்த மண்டபம் 1967 மற்றும் 1993ம் ஆண்டுகளில் சீரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2009ம் ஆண்டு  ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற  புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ₹39.6 கோடி மதிப்பீட்டில் மண்டபத்தை சென்னை மாநகராட்சி புதுப்பித்தது. இந்நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 2012ம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கின. இந்த பணிகளுக்கு குழிதோண்டும் போது ரிப்பன் மாளிகை மற்றும் விக்டோரியா மண்டபம் ஆகியவற்றில் விரிசல் ஏற்பட்டது. இதைத் தவிர்த்து ரிப்பன் மாளிகை முன்பு இருந்த புல்வெளியும் சேதமடைந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெறமால் இருந்தது.
இந்நிலையில் விக்டோரியா மண்டபம்  சீரமைப்பு பணிக்கு சென்னை மாநகராட்சி ₹1.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடந்து வரும் மெட்ரோ ரயில் பணிகள் மார்ச் மாதம் இறுதியில் முடிவடையும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பிறகு  விக்டோரியா மண்டபத்தை புதுப்பிக்கும் பணி தொடங்கும். ரிப்பன் மாளிகைக்கும், விக்டோரியா மண்டபத்திற்கும் இடையில் உள்ள சுவர் இடிக்கப்பட்டு விடும். ரிப்பன் மாளிகையின் புல்வெளியும், விக்டோரியா மண்டபத்தின் புல்வெளியும் இணைக்கப்பட்டு விடும். இதன் மூலம் எளிதாக மண்டபத்திற்கு சென்று வர முடியும். இதைத் தவிர்த்து அணிவகுப்பு நிகழ்ச்சிகளையும் நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Victoria Hawk ,Metro ,
× RELATED சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தில்...