×

வி.மாதேப்பள்ளியில் திமுக கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட வி.மாதேப்பள்ளி கிராமத்தில் திமுக சார்பில் “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்” என்ற கோஷத்துடன் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார்.  கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று பேசினர். அப்போது அவர்கள் பேசுகையில் ரேசன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. ஒரு முறை வாங்கத் தவறினால் மறுமுறை அரிசி வழங்குவதில்லை. இப்பகுதி மாணவ, மாணவியர்கள் நலன் கருதி நூலகம் அமைக்க வேண்டும். விளையாட்டு மைதானம் ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும். தாய் சேய் நல மருததுவமனை இருந்தது. ஆனால் அது தற்போது செயல்படுவதில்லை.

இது போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றனர். இதற்கு பதில் அளித்து பேசிய எம்எல்ஏ., முருகன், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனைக்கு பின் முடிவு செய்யப்படும். அதிகாரிகளுடன் பேசி ரேசன் அரிசி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேலும் இதுபோன்ற அவல நிலை தொடராமல் இருக்க வரும் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம், என்றார். கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொருளாளர் ரகுநாத், பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சதாசிவம், சரஸ்வதி கல்வி நிறுவனத் தலைவர் அன்பரசன், ஒன்றிய துணை செயலாளர் சேகர், முன்னாள் தலைவர் ரகு, ஒன்றிய அமைப்பாளர் ராகவன், முன்னாள் ராணுவ வீரர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : meeting ,DMK Gram Sabha ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...