×

தைப்பூசம் கோலாகலம்: மாவட்டத்தில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி, ஜன.22: தைப்பூசத்தையொட்டி, கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி முருகன் கோவியில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேய சுப்பிரமணி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி 82ம் ஆண்டு தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் முக்கிய நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு திரண்டு வந்தனர். பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

இவ்விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. மறுசூழற்சிக்கு பயன்பாடாத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தைப்பூச விழாவை முன்னிட்டு மாட்டு சந்தையும் நேற்று(21ம் தேதி) தொடங்கியது. வரும் 26ம் தேதி வரை மாட்டு சந்தை நடைபெறுகிறது. இவ்விழாவிற்காக கிருஷ்ணகிரி நகரிலிருந்து கோயிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.  கிருஷ்ணகிரி டிஎஸ்பி கண்ணன், டவுன் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் 75-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சுதர்சன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.

இதேபோல், மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காவேரிப்பட்டணம் அருகே கருக்கன்சாவடி முருகன் கோயில், காவாகரை முருகன் கோயில், போச்சம்பள்ளி அருகே கருமலை நடுபழனி ஆண்டவர் கோயில், சந்தூர் மாங்கனி முருகன் கோயில், ஜெகதேவி வேல்முருகன் சுவாமி கோயில், சுண்டகாப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயில், ஊத்தங்கரையில், கல்லாவி சாலை மற்றும் காந்தி நகரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில்கள், சேலம் சாலையில் உள்ள பாலமுருகன் சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இதேபோல் அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் கெலமங்கலம் பகுதியில் சிவன் கோயில்களில் உள்ள முருகன் சன்னதிகளில் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் மலை கோயிலில் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உத்தனப்பள்ளி அருகே அகரம் முருகன் கோயில், மாநில எல்லையான வேப்பனஹள்ளி பகுதியில உள்ள இடையறப்பள்ளி முருகன் கோயில், பச்சைமலை முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், பக்தர்கள் குடும்பத்தோடு பங்கேற்று அரோகரா கோஷத்துடன் சுவாமியை வழிபட்டனர்.

ஓசூர்: ஓசூர் பெரியார் நகரில் உள்ள வேல்முருகன் கோயிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. உத்தனப்பள்ளி அருகே அகரத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்கள், ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து தேர்த் திருவிழா நடைபெற்றது.

இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காவேரிப்படடணம்: காவேரிப்பட்டணம் அருகே தேவீரஅள்ளியில் கருமலை மீது உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Murukan ,district ,temples ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு