×

காதை பிளக்கும் ஹாரன் சத்தத்தால் மக்கள் அவதி

போச்சம்பள்ளி, ஜன.22:  போச்சம்பள்ளி பகுதியில், வாகனங்களில் விதி மீறி பொருத்தப்படும் ஏர்ஹாரன்கள் காதை பிளக்கும் அளவுக்கு ஒலி எழுப்பி வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போச்சம்ள்ளி பகுதியில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அன்றாட பணிகளுக்கு நகர்பகுதிக்கு வந்து செல்ல வசதியாக அதிநவீன கார்கள், இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், வாகன பெருக்கத்து ஏற்றவாறு நகர் பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை.

இதனால், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், வாகனங்களில் அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை ஒவ்வொரு வாகனங்கத்திற்கும் குறிப்பிட்ட ஒலி எழுப்பும் கருவிகளையே பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதனை மீறி லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஏர்ஹாரன்களை இதர வானங்களிலும் பொருத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சாலையில் வாகனங்களை கடந்து செல்வதற்கும், ஒரு வாகனத்தை மற்றொரு வாகனம் முந்தி கடந்து செல்வதற்கும் தடை செய்யப்பட்ட ஹாரன்களை புறநகர் பகுதியில் தான் பயன் படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தப்படும் ஹாரன்களும் வரையறுக்கப்பட்ட டெசிபல் அளவிற்கு மேல் இருக்க கூடாது. ஆனால், வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிகளவு ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இதுகுறித்து போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், போச்சம்பள்ளி பகுதிக்கு வரும்  அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஏர்ஹாரன்கள் அலற விடுவதால் இதுபோன்ற சத்தங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடையே எரிச்சலடையச் செய்கிறது. இது தவிர கல் கடத்தல், மணல் கடத்தல், டிப்பர் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களிலும் ஏர்ஹாரன் பயன்படுத்தப்படுகிறது.

இதன் சத்தம் சாலையோரம் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் குடிப்பிருப்புகளில் வசித்து வரும் முதியோர்கள் என அனைத்து தரப்பினரையும் வதைப்பதாக உள்ளது. வாகனங்களில் செல்வோரின் கவனத்தை சிதற வைக்கும் ஏர்ஹாரன்கனை தடை செய்ய காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்