×

மாவட்டத்தில் ரயிலில் அடிப்பட்டு இறப்பவர் எண்ணிக்கை அதிகரிப்பு

திருப்பூர், ஜன. 22:   திருப்பூர் மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டு இறப்பவர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 பேர் ரயிலில் அடிபட்டு இறந்தனர். திருப்பூர் வழியாக தினசரி கேரளா, சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு 30க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. திருப்பூர், பெருந்துறை, ஊத்துக்குளி, வஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளை கடந்து ரயில்கள் செல்கின்றன. பெருந்துறை பகுதியில் இருந்து சோமனூர் வரை சுமார் 10க்கு மேற்பட்ட இடங்களில் மக்கள் கடந்து செல்லும் இடமாக உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் இவ்வழியை கடந்து செல்கின்றனர். வழித்தடங்களை தவிர, ரயில் தண்டவாளம் அருகில் குடும்பத்துடனும் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தண்டவாளத்தை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.  இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது: திருப்பூர் ரயில் நிலையம் பகுதிகளில் ரயில்வே போலீசார், உயிர்ப்பலி தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வாரம் தோறும், வெள்ளிக்கிழமை விபத்துகள் ஏற்படும் பகுதிகளில் பாதுகாப்பு குறித்த துண்டுபிரசுரம், மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இதை கவனிக்காமல் தண்டவாள பாதையை செல்போன் பேசிகொண்டே கடப்பது, கழிப்பிடமாக பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் ரயிலில் அடிபட்டு இறக்க நேரிடுகிறது. ரயில்வே ஸ்டேஷனில் தண்டவாள பாதையை கடப்பதற்கு நடை மேம்பாலங்களை பயன்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பயணிகள் அதை பயன்படுத்தாமல் தண்டவாளங்களை குழந்தைகளுடன் கடக்கின்றனர். பணியில் இருக்கும் ரயில்வே அதிகாரிகள் இதை கண்டிக்கவே செய்கின்றனர். கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொதுமக்கள் விழிப்புடன் இருந்தால் இத்தகைய விபத்துகள் ஏற்படாது என்றனர்.

Tags : deaths ,district ,
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...