×

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மாணவிகளுக்கு பழுதடைந்த சைக்கிள்

திருப்பூர், ஜன. 22:    கடந்த 2004ம் ஆண்டு முதல் தமிழக அரசு பிளஸ்-1 பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது. இதனால் பிளஸ் 1, பிளஸ்-2 படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புறங்களில் பஸ் வசதி இல்லாத இடங்களை சேர்ந்த மாணவர்களுக்காகவும், நகர்ப்புறங்களில் பஸ் நெருக்கடி காரணமாக, பள்ளிக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களின் வசதிக்காகவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இத்திட்டம் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படுவதில்லை. கல்வியாண்டு ஜூன் மாதம் துவங்கினாலும், அக்டோபர் மாதத்தில் இருந்து தான் சைக்கிள் வழங்கப்படுகிறது.  

இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளில் காலதாமதமாக தற்போது தான் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று மாலை மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. மாணவிகளுக்கு வழங்க வேண்டிய இலவச சைக்கிள்களை உரிய பாதுகாப்பு இல்லாமல், மாதக்கணக்கில் வெயிலில் வைக்கப்பட்டிருந்ததால், பெரும்பாலான சைக்களில்களில் காற்று இல்லாமல் இருந்தது.

மேலும், சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருந்த உதிரி பாகங்கள் சரியாக பொறுத்தப்படாததால், மாணவிகள் சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்லும் போதே, உதிரி பாகங்கள் சில கழன்று கீழே விழுந்தன. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த மாணவிகள் சைக்கிள் கடைகளை தேடி அலைந்தனர். தங்களது பெற்றோர்களுக்கு தெரிவித்து, அவர்களை வரவழைத்து பைக்கிலும், ஆட்டோக்களிலும் சைக்கிள்களை ஏற்றி சென்றனர். பெற்றோர் வர முடியாத நிலையில் மாணவிகள் சிலர் சைக்கிள்களை தள்ளிக்கொண்டே சென்றனர்.

Tags : Tirupur jayavabai ,
× RELATED இளம் கவிஞர் விருது போட்டியில் வென்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு