×

பல ஆண்டாக அடிப்படை வசதி இல்லை பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

திருப்பூர், ஜன. 22:  திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். திருப்பூர், தாராபுரம் பகுதியை சேர்ந்த ஜனசக்தி நகர் பொதுமக்கள் அளித்து மனு: இப்பகுதியில், 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறோம். இங்கு மின்சாரம், குடிநீர் வசதி இல்லை. மேலும், சுகாதாரம் உட்பட எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரப்படவில்லை. மேலும் குடிநீருக்காக தினமும் 1 கி.மீ. தூரம் நடந்து சென்று கொண்டு வர வேண்டியுள்ளது.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். பல்லடம் வட்ட நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் அளித்த மனு: வரும் ஜன.26ம் தேதி குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் அயோடின் உப்பு பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் நுண்ணூட்ட சத்தான அயோடின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் விதமாக, அயோடின் சத்தினை உப்பில் கலந்து விற்பனை செய்ய கடந்த 1991ம் ஆண்டு முதலே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் அயோடின் உப்பு குறித்து ஆராய்ச்சி செய்ததில் தற்போது 40 சதவிகிதம் வரை அயோடின் கலக்காத தரமற்ற உப்பு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு வரும் குடியரசு தினத்தன்று, நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அயோடின் உப்பு அவசியம், அயோடின் குறைவினால் உடல் நலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்க வேண்டும், ஊராட்சி பகுதிகளில் அயோடின் கலந்த உப்பு பயன்பாடு மற்றும் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அயோடின் மற்றும் இரும்புச்சத்து கலந்த அம்மா உப்பு பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அளித்த மனு: திருப்பூர், மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட அலகுமலை ஊராட்சியில் உள்ள கோவிலை சுற்றி கடந்தாண்டு வேலி அமைக்கப்பட்டது. இதனால் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தண்ணீர் எடுத்து வரவும், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவும் 2 கி.மீ வரை சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தீண்டாமை வேலியினை அகற்ற வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் கருத்துக்கள் தெரிவித்து போராட்டம் அறிவித்தனர். இதனையடுத்து தீண்டாமை வேலியின் பொதுமக்கள் செல்லும் வழித்தடத்தினை மட்டும் மாவட்ட நிர்வாகம் அகற்றியது.

இந்நிலையில் அகற்றப்பட்ட இடத்தில் தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் கோவில் தேரின் பாதுகாப்பை சுட்டிக்காட்டி நுழைவு வாயில் அமைக்கும் முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், மீண்டும் தாழ்த்தப்பட்ட மக்களை பிரிக்கும் செயலாக கருதப்படுகிறது. இதனால் சமூக ஒற்றுமை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் தீண்டாமை வேலியின் வழித்தடத்தில் நுழைவு வாயில் அமைக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஆதியூர் பகுதி பொதுமக்கள் அளித்த மனு:  ஆதியூர் பகுதியில் உள்ள பாப்பண்ணன் நகர், பாப்பண்ணன் (45) என்பவருக்கு சொந்தமானது. இப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட சைட்டுகள் உள்ளது. இதில், கடந்த 2015ம் ஆண்டு தலா ரூ.4 லட்சம் வரை கொடுத்து இடம் வாங்கினோம். இந்நிலையில், தற்போது, இப்பகுதியில் 45 வீடுகள் உள்ளது. இங்கு உள்ள வீடுகளுக்கு முறையாக கிரையம் செய்து கொடுக்கவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு, தண்ணீர் மற்றும் மின்சார வசதி கிடையாது. கடந்த 4 ஆண்டாக கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றார். எனவே, இந்த இடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, இப்பகுதி மக்களுக்கு இடம் கிரையம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : facility ,collector ,
× RELATED பிரதமர் வீட்டு வசதி திட்ட முறைகேடு: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை