×

கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

திருப்பூர், ஜன. 22:  திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையம் கால்நடை சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் வரத்து இருந்ததால் ரூ.2 கோடிக்கு வியாபாரம் நடந்தது. திருப்பூர், கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, கேரளா, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வியாபாரிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து சந்தைகளுக்கும் சென்று கால்நடைகளை வாங்கி விற்கும் புரோக்கர்களாக செயல்படுகின்றனர். அதுபோக கால்நடை சந்தைகளில் வயதான கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி லாரிகளில் கேரளாவிற்கு அனுப்புகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் அனைத்து மாடுகள் விற்கப்படுகிறது. திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையம் சந்தைக்கு நேற்று 20க்கு மேற்பட்ட நாட்டு இன மாடுகள் விற்பனைக்கு வந்தது.

இதை வாங்க வியாபாரிகள், விவசாயிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. நாட்டு மாட்டின் வயதை பொறுத்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை ஆனது. திருப்பூர், காங்கேயம், பல்லடம், அவிநாசி, தாராபுரம், உடுமலை உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் சந்தைக்கு வந்தன. பெருவெட்டு மாடு, எருமைகள் ரூ.25 ஆயிரத்துக்கு மேலும், சிறிய வயது உடைய கால்நடைகள் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்திற்கு விலை போனது. நேற்றைய கால்நடை சந்தையில் ரூ.2 கோடிக்கு வியாபாரம் நடந்தது.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு