×

மாவட்டத்தில் கோவில்களில் தைப்பூச திருவிழா

திருப்பூர், ஜன. 22:  திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்த மலையில் உள்ள  வெற்றிவேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், சுவாமி திருவீதி உலா, மயில் வாகன காட்சி உலா, சுவாமி திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்வுகள் நடந்தன. இந்நிலையில் நேற்று திருத்தேர் வடம் பிடித்தல், வடம் பிடித்து திருத்தேர் நிலை சேர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க தேர் வடம் பிடித்தனர். தொடர்ந்து இன்று பரிவேட்டை, நாளை தெப்பத்தேர், 24ம் தேதி மலைத்தேர் வடம் பிடித்தல், இறுதியாக 25ம் தேதியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதேபோல், திருப்பூர் அருகேயுள்ள அலகுமலை முத்துக்குமார சுவாமி கோயிலின் தைப்பூச தேரோட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பழனிசாமி, எஸ்.பி கயல்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் சேர்ந்து திருத்தேர் வடம் பிடித்தனர். திருமுருகன் பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் தைப்பூசம் முன்னிட்டு சண்முகநாதருக்கு நேற்று அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் திருப்பூர், அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால், சந்தன குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாசி மகத் தேரோட்டத்தை முன்னிட்டு திருத்தேர்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மேலும் மங்கலம் குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேர் வடம் பிடித்தனர்.

காங்கயம்: காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 12ம் தேதி மலையடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று அதிகாலை மஹா அபிஷேகமும், தொடர்ந்து சாமி ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திருத்தேருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சிறப்பு அழைப்பாளர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இதில் எஸ்.பி., கயல்விழி, காங்கயம் எம்.எல்.ஏ., தனியரசு, ஈரோடு எம்.பி செல்வக்குமாரசின்னையன், முன்னாள் எம்.எல்.ஏ., என்.எஸ்.என்.நடராஜ், காங்கயம் டி.எஸ்.பி., செல்வம், தக்கார், உதவி ஆணையர் ஹர்சினி சிவன்மலை கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன், அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து மாலை 4.30 மணிக்கு வடம்பிடித்து தேர் இழுக்க துவங்கினர். திருத்தேர் அசைந்தாடி வந்தது. 4.50 மணிக்கு தேர் நடு வீதியில் நிறுத்தப்பட்டது, தொடர்ந்து இன்றும், நாளையும் தேர் வலம் வரும், நாளை இரவு நிலை அடைகிறது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அவிநாசி: அவிநாசிலிங்கேசுவரர்  கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். காலை 6.30 மணிக்கு தேர் முகூர்த்தம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வானவேடிக்கை மற்றும் அதிர்வேட்டுகள், பஞ்சவாத்தியங்கள் முழங்க அவிநாசியில் பக்தர்கள் பரவசத்துடன் தேரை இழுத்து வந்தனர்.

Tags : festival ,temples ,district ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு