×

சாமுண்டிபுரம் பகுதியில் பஸ் வசதி இல்லாததால் தொழிலாளர்கள் அவதி

திருப்பூர், ஜன. 22:  திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வலையங்காடு, சாமுண்டிபுரம், தாய்முகாம்பிகை காலனி, சிறுபூலுவப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்ளும், மாணவ, மாணவிகளும், தங்கள் பணி நிமித்தமாக திருப்பூரின் மத்திய பகுதிக்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு 25-சி, 1ஏபி, 39 என குறிப்பிட்ட பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. இதில், சில நாட்களில் அந்த பஸ்களில் ஏதாவது ஒன்று வராமல் போவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் போதுமான பஸ் வசதி இல்லாததால் பனியன் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால், பஸ் இல்லாத நேரங்களில் அப்பகுதி மக்கள் சுமார் 2 கி.மீ தூரமுள்ள குமார் நகருக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, பனியன் தொழிலாளர்கள் காலை நேரங்களில் குறித்த நேரத்துக்கு வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் பெண் தொழிலாளர்கள், குமார் நகரில் இருந்து வீடு திரும்பும் வரை பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இப்பாதிப்புகளை கருத்தில் கொண்டு, அப்பகுதிக்கு கூடுதல் பஸ்களையோ அல்லது மினி பஸ், ஷேர் ஆட்டோ ஆகியவற்றையோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags : area ,Samundirapuram ,bus facility ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...