×

ஆண்டிபட்டி அருகே வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் செயல்படத்துவங்கியது

ஆண்டிபட்டி, ஜன.22: தினகரன் செய்தி எதிரொலியால், ஆண்டிபட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகம் நேற்று முதல் செயல்படத் துவங்கியது.ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பின்புறத்தில்  வேளாண்மை உதவி இயக்குனர் விரிவாக்க மையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.இக்கட்டத்தில் உரம், பூச்சி மருந்து, விதை, பயறு வகைகள்  உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர். ஆனால், கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டும், காரைகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து நீட்டிக் கொண்டும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் கட்டிடம் வலுவிழந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் கசிவு ஏற்படுவதால், அலுவலக உபயோக பொருட்களான கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் பாதிப்படைகின்றன.

இது சம்பந்தமாக விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் புதிய கட்டிடம் கட்ட கோரி மனு அளித்தனர். அதன் அடிப்படையில் ரூ.150 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆண்டிபட்டிற்கு தெற்கு பகுதியில் ஏத்தக்கோயில் சாலையின் அருகில் ஒருங்கிணைந்த  வேளாண்மை மைய அலுவலக விரிவாக்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கட்டி முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் அடிப்படை வசதிகள் இல்லாததால் தான் திறக்கப்படவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதுகுறித்த செய்தி, தினகரனில் கடந்த வாரம் பிரசுரமானது. இதன் எதிரொலியாக ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் நேற்று முதல் செயல்படத் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி  வேளாண்மை உதவி  இயக்குனர் ராஜசேகர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், `` விவசாயிகளின் தேவைக்காக அரசு ரூ.150 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் 2017ம் ஆண்டு நவ.9ம் தேதி தேனியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். ஆனால் சில காரணங்களினால் அலுவலகம் செயல்படுவதில் தாமதம் ஏற்பட்டது’’ என்று தெரிவித்தனர்.

Tags : Agricultural Extension Office ,Andipatti ,
× RELATED பிரிந்து சென்றவரை சேர்த்து...