×

தைப்பூச திருவிழா- வயலூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி, ஜன.22: திருச்சியில் முருகன் கோயில்களில் தைப்பூச விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. வயலூர் முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.தைப்பூச திருவிழா முருகன் கோயில்களில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருச்சியில் உள்ள வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், வழிவிடு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.வயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு முத்துக்குமாரசாமி புறப்பாடாகி உய்யகொண்டான் வாய்க்காலுக்கு சென்று அங்கு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு முத்துக்குமாரசாமி கோயிலை வந்தடைந்தார். இரவு முத்துக்குமாரசாமிக்கு சர்வ அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு முத்துகுமாரசாமி வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு உய்யகொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர் காசிவிஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய சாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இதேபோல் ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



Tags : Valiyur Murugan Temple ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி