×

அங்கன்வாடி பணி நியமனத்துக்கு இடைநிலை ஆசிரியர்கள் எதிர்ப்பு

சிவகங்கை, ஜன. 22: சிவகங்கை மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி பணிகளுக்கான உத்தரவை பெற மறுத்து, இடைநிலை ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவங்கி அதில் தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்களை பணியமர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளனர். நேற்று முதல் மாநிலம் முழுவதும் அங்கன்வாடிகளில் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் 69 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு, ஏற்கனவே பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நியமித்து, மாவட்ட கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், இந்த உத்தரவுகளை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பெறாமல், தங்களை அங்கன்வாடி பணிகளுக்கு நியமித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், உத்தரவை பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தனர். அதையும் ஆசிரியர்கள் பெற மறுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, அந்த பணியிடத்திற்கு நியமிக்காமல், அங்கன்வாடி பணிகளுக்கு நியமித்துள்ளதால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால், உபரி பணியிடம் என்ற பொய்யான கணக்கை காட்டி எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களை நியமிக்க உள்ளனர். அங்கன்வாடி குழந்தைகளுக்கு கற்பிக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாண்டிச்சோரி ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்கும்போது அவர்களை நியமிக்காமல், ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களை தரம் இறக்குவது என்பது ஏற்க முடியாததாகும். இது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை முற்றிலும் ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கை. இதை அனுமதிக்க முடியாது’ என்றனர்.


Tags : teachers ,Anganwadi ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்