×

பறிமுதல் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் புதிய சாலை பணி முடக்கம்

காரைக்குடி, ஜன.22: காரைக்குடி தாலுகா அலுவலக சாலையில் திருட்டு மணல் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளதால், புதிய சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. காரைக்குடி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணி முடிக்கப்படும் பகுதிகளில் சாலை அமைக்கப்படுகிறது. தற்போது 120 அடி சாலை, சூடாமணிபுரம் திருவள்ளுவர் தெரு, சூடாமணிபுரம் பூங்கா சாலை, ஆனந்தா நகர் மெயின் சாலை, கண்டனூர் ரோடு, சண்முகராஜ சாலை, அம்பாள்புரம் முதல் தெரு முதல் மூன்றாவது தெரு வரை, தாலுக்கா அலுவலக ரோடு, சர்ச் முதல் தெரு முதல் 5வது தெரு வரை, கோவிந்தராஜூலு சாலை, முத்துமாரியம்மன் கோவில் ரோடு, அருணாசலம் தெரு, கலைஞர் சாலை, கழனிவாசல் புதுரோடு, சுப்பிரமணியபுரம் வடக்கு, திலகர் நகர், வள்ளுவர் தெரு, தமிழ்தாய் ரோடு, போலீஸ் காலனி ரோடு, காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாலை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதில் பல பணி முடிக்காமல் உள்ளதால் சாலை போடப்படாமல் உள்ளது. பணி முடிக்கப்பட்ட 120 அடி ரோடு,  டிடிநகர் சாலை, சர்ச் முதல் வீதி உள்பட சில சாலைகள் போடப்பட்டுள்ளன. தமிழ்தாய் கோவில் சாலை  உள்பட ஒருசில சாலை பணிகள் மட்டும் துவங்கி முதல் கட்ட பணியாக கிரசர் ஜல்லி பணி போடப்பட்டுள்ளது. அதேபோல் சண்முராஜ சாலை, தாலுகா அலுவலகம் சாலைகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் தாலுகா அலுவலக சாலையின் இருபுறங்களில் திருட்டு மணல் ஏற்றி வந்து பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை வருவாய் துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். இதனை அப்புறப்படுத்த வேண்டும் என வருவாய் அதிகாரிகளிடம் சம்மந்தப்பட்ட துறையினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதியில் சாலை பணிகள் துவங்க முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சாலையை ஆக்கிரமித்து பிடிபட்ட திருட்டு மணல் லாரிகளை வருவாய் துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பகல் வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது சாலை பணிகளும் துவங்க முடியாத நிலை உள்ளது. தாலுகா அலுவலகம் பின்புறம் இடம் இருந்தும் அங்கு நிறுத்தாமல் சாலையில் நிறுத்தி வைத்துள்ளனர். கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...