×

மார்க்கெட் இல்லாமல் திறந்த வெளியில் மீன்கள் விற்பனை

ராமநாதபுரம், ஜன.22: மண்டபம் அருகே மீன் மார்க்கெட் இல்லாத காரணத்தால் திறந்தவெளியில் வைத்து மீன்களை விற்க முடியாமல் மீன் வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மீன் விலையும் அதிகமாக உள்ளதாக பொதுமக்களிள் புகார் தெரிவித்தனர்.
மண்டபம் அருகே மண்டபம் முகாமில் இலங்கை அகதிகள், பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மண்டபம் பகுதி கடல் சார்ந்த பகுதி என்பதால் இப்பகுதி மக்கள் அனைவருக்கும் கடல் மீன்கள் பிரதான உணவாக பயன்படுகிறது. மண்டபம் முகாமில் மீன்களை வைத்து விற்பனை செய்ய தனியாக எந்த மார்க்கெட்டும் இல்லை.

கடை தெருவில் திறந்த வெளியில் வைத்து மீன் வியாபாரிகள் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். மீன்களை வாங்கும் பொதுமக்களுக்கு மீன் வியாபாரிகள் ஒரு சிலர் மீன்களை துப்புறவு செய்தே கொடுக்கின்றனர். அதில் ஒதுக்கப்படும் கழிவுகளை அவர்கள் அப்புறப்படுத்துவதில்லை. இதனால் கடைத்தெருவில் எப்போதுமே துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. மீன் வியாபாரிகளுக்கு தனியாக மீன் மார்க்கெட் அமைத்து கொடுத்து சுகாதாரக்கேடு ஏற்படாமலும், மீன்களை அதிக விலைக்கு விற்காமல் முறையான விலைக்கு விற்பனை செய்யவும் வழிவகை செய்ய சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியை நந்தகுமார் கூறுகையில், இலங்கை அகதிகள் இருப்பதால் மீன்கள் கிலோ ரூ.150 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. கடலோர பகுதிகளிலேயே மீன்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் எங்களால் அதிக விலைகொடுத்து மீன்களை வாங்க முடியவில்லை. மீன்கள் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

மீன் வியாபாரிகள் கூறுகையில், உச்சிப்புளி, மண்டபம் உள்ளிட்ட பிற இடங்களில் உள்ளதுபோல் தனியாக மீன்களை வைத்து விற்பனை செய்ய மீன் மார்க்கெட் கட்டித்தர வேண்டுமென்று ஏற்கனவே பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். மண்டபம் முகாம் பகுதியில் போதுமான இடவசதி இருந்தும் மீன் மார்க்கெட் கட்டிதர பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யவில்லை. படகுகளில் பிடிக்கப்படும் மீன்கள் அனைத்தும் வெளியிடங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்ய எங்களைப்போன்ற சிறு வியாபாரிகளுக்கு மீன்கள் குறைந்த அளவே கிடைக்கிறது. மீன்களை ஏற்றுமதி செய்யும் மொத்த வியாபாரிகள் விலையை குறைத்தால் மட்டுமே எங்களால் மீன் விலையை குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை