×

விவசாயிகளிடம் 210 டன் நெல் கொள்முதல்

பவானி, ஜன.22:  பவானியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து விவசாயிகளிடம் 210 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.18.25 லட்சம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. பவானி அருகே மைலம்பாடியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜன.4ம் தேதி முதல் இங்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேட்டூர் மேற்குக்கரைப் பாசனப் பகுதியில் தற்போது நெல் அறுவடை நடந்து வரும் நிலையில் நெல் வரத்து படிப்படியாக அதிகரிக்கத் துவங்கி உள்ளது.

இங்கு, சன்ன ரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.18.40க்கும், மோட்டோ ரக நெல் ரூ.18க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த இரு வாரங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் சுமார் 210 டன் கொள்முதல் செய்யப்பட்டு, பெருந்துறையில் உள்ள திறந்தவெளி கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, விவசாயிகளுக்கு ரூ.18.50 லட்சம் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.
முதலில் வந்தவர்களுக்கு, முதலில் கொள்முதல் எனும் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு 200 மூட்டைகள் என தொழிலாளர்களைக் கொண்டு எடை போடப்பட்டு, தைத்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையம் தொடர்ந்து 3 மாதங்களுக்கு செயல்படும். நெல்லை விற்பனைக்குக் கொண்டு வரும் விவசாயிகள், தங்கள் நிலத்தின் அடங்கல் நகல், கிராம நிர்வாக அலுவலரின் சான்று, வங்கி பாஸ்புக் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். நெல்லுக்கான பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என பட்டியல் எழுத்தர் மகேஸ்குமார் தெரிவித்தார்.

Tags : Paddy ,
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...