×

35 லட்சம் பேரின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் ரூ.1,200 கோடி திட்டம் என்னாச்சு? அமைச்சர்கள் ‘கப்சிப்’

மதுரை, ஜன.22: மதுரை மாநகருக்கு ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் உள்ளிட்ட மத்திய அரசின் சிறப்பு திட்டங்களில் இடம் கிடைத்தது. இதன் மூலம் மாநகராட்சி பரிந்துரைத்த ரூ.1020 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதில் ரூ.356 கோடி திட்ட பணிகளுக்கு 2 நாட்களுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் ரூ.160 கோடியில் பெரியார் பஸ்ஸ்டாண்ட் மறு சீரமைப்பு உள்பட 9 திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்துக்கோ, போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க கூடிய கோரிப்பாளையம் பறக்கும் பாலம் உள்ளிட்ட மேம்பால திட்டங்களுக்கோ அடிக்கல் நாட்டப்படவில்லை.  முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வெளியேறும் லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு 158 கி.மீ. தூரம் குழாய் அமைத்து குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை 2017 ஜூலையில் அறிவித்து அரசின் சாதனை பட்டியலில் வெளியிடப்பட்டது. மதுரை மாநகருக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் 35 லட்சம் மக்கள் குடிநீர் பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு ஏற்படும் என்று மதுரை மாவட்ட அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர்.

 இந்த திட்டம் ஏற்கனவே 2009 மற்றும் 2012ம் ஆண்டுகளில் ஆய்வு நடத்தி சாத்தியமில்லை என நிராகரிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் அந்த திட்டத்தை கையில் எடுத்து “அம்ரூத்” சிறப்பு திட்டத்தில் மத்திய அரசிடம் ரூ.1200 கோடிக்கு அனுமதி வாங்கியது அரசு. அரசு அறிவித்து 2 ஆண்டுகளாகியும், அந்த குடிநீர் திட்டம் கானல் நீராகி போனது. ஸ்மார்ட் சிட்டி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அமைச்சர்கள் இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் கதி என்ன என்றுகூட பேசாமல் மவுனமாகி கொண்டனர். இதனால் மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்திற்கு குடிநீர் பற்றாக்குறை அதிகரித்து கொண்டே போகிறது. கோடையில் தட்டுப்பாடு கடுமையாகி மக்களை வாட்டி எடுக்கிறது. அதற்கு தீர்வு ஏற்படவில்லை.


Tags : Ministers ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...