×

கோவையில் குளக்கரை நிலம் 99 ஆண்டுக்கு குத்தகை

கோவை, ஜன.22: கோவை குளங்களின் ஒரு பகுதி அரசு துறைகளுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. இந்த நிலத்தை திரும்ப மீட்க பொதுப்பணித்துறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 32 குளங்கள், 20 தடுப்பணை இருந்தது. இதில் கடந்த 20 ஆண்டுகளில் அம்மன் குளம், மண்ணரை குளம் உட்பட 4 குளங்கள் பயன்பாடின்றி அழிந்து போனது. சில குளங்களின் நீர் தேக்க பரப்பு குறைந்து வருகிறது. 38 ஏக்கர் பரப்பிலான அம்மன் குளம் பொதுப்பணித்துறை வசம் இருந்து குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைக்கபட்டு, அங்கே 2,350 வீடுகள் கட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செல்வாம்பதி குளத்தின் வடக்கு கரையில் 2.4 ஏக்கர் நிலம், 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் 23 ஆண்டிற்கு முன் நுகர்பொருள் வாணிப கழகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை திரும்ப பெற பொதுப்பணித்துறை நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இந்நிலையில், குளத்தை மேம்பாட்டு பணிக்காக பொதுப்பணித்துறை நிர்வாகம் கடந்த 2008ம் ஆண்டில் மாநகராட்சி நிர்வாகம் பெற்று கொண்டது.  குளம் முழுவதையும் சீரமைக்கவும், நடைபாதை மற்றும் கரைகளை பலப்படுத்த 25 கோடி ரூபாய் திட்டபணிகள் நடத்தவும் மாநகராட்சி முன் வந்தது. ஆனால் வாணிப கழக குடோன்களை காலி செய்ய மாநகராட்சி முன் வரவில்லை.

இழந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு, சீரமைத்து ஒப்படைக்கும் என எதிர்பார்த்த பொதுப்பணித்துறை நிர்வாகத்தினர் ஏமாற்றமடைந்தனர். உக்கடம் பெரிய குளமும் பொதுப்பணித்துறை வசமிருந்து மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பிறகு குளத்தின் மேற்கு பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகமானது. இதை மீட்க மாநகராட்சி முன் வரவில்லை.  40 ஆண்டிற்கு முன் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்ட உக்கடம் பஸ் டிப்போவும், வாலாங்குளத்தின் கரையில் 15 ஆண்டிற்கு முன் மின் வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்ட இடமும் மீட்கப்படவில்லை. 3.5 ஏக்கர் பரப்பிலான இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 50 ேகாடி ரூபாய். வாலாங்குளத்தின் கிழக்கு பகுதியில் 1 ஏக்கர் நிலம், சுங்கம் பஸ் டெப்போவின் பிடிக்கு சென்று விட்டது. மேலும் சில பகுதியை பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறையினர் கையகப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள சிங்காநல்லூர், சூலூர் உள்பட சில குளங்களை பல்வேறு அரசு துறையினர் அலுவலகம் அமைக்க அணுகி வருகின்றனர். குத்தகை நிலங்களை திரும்ப பெற அரசு துறையினர் தடை ஏற்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘‘ நீராதார குளங்கள் பிற அரசு துைறகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. திட்ட பணிகள் முடிந்த பின்னர் திரும்ப ஒப்படைக்கவேண்டும் என குத்தகை விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 99 ஆண்டு காலம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பணி முடிந்தால் திரும்ப பெற பொதுப்பணித்துறைக்கு அதிகாரம் உள்ளது. மின்வாரியம், போக்குவரத்து கழகம், வாணிப கழகத்தினர் இடத்தை காலி செய்ய மறுத்து வருகின்றனர். தற்போது சம்பந்தப்பட்ட குளங்களை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வருகிறது. குளங்களில் கட்டுமானங்களுக்கு அனுமதி தரக்கூடாது என தெரிவித்திருக்கிறோம், ’’ என்றனர்.

Tags : lease land ,Coimbatore ,
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்