×

வெம்பக்கோட்டையில்விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் சாலையோர மணல் குவியல்

சிவகாசி, ஜன. 22: வெம்பக்கோட்டையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில், சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி-சங்கரன்கோவில் மெயின்ரோட்டில் வெம்பக்கோட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்த ஊர் வழியாக சங்கரன் கோவில், ஆலங்குளம், சாத்தூர், கோவில்பட்டி, திருவேங்கடம், ஏழாயிரம்பண்ணை போன்ற பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்க பட்டு வருகின்றன. இதனால் வெம்பக்கோட்டையில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். வாகன போக்குவரத்தும் அதிகளவில் இருக்கும்.
இந்நிலையில், வெம்பக்கோட்டை பஸ்நிறுத்தம் அருகே சாலையோரம், தோண்டிய மணலை மலை போல குவித்து வைத்துள்ளனர். இந்த குவியலை மாதக் கணக்கில் அகற்றாமல் உள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் குவியல் சரியாக தெரிவதில்லை.
அருகில் வரும்போதுதான் வாகன ஓட்டிகளுக்கு மணல் குவியல் இருப்பது தெரிய வருகிறது. இதனால், விபத்தில் சிக்குகின்றனர்.
சாலையோரம் மாதக்கணக்கில் குவிந்து கிடக்கும் மணல் குவியலை அகற்ற நடவடிக்கை இல்லை. அருகில் உள்ள காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசாரும் கண்டுகொள்வதில்லை. பல்வேறு அரசு அலுவலகங்கள் இருக்கும் வெம்பக்கோட்டையில், அடிப்படை வசதியும், சாலை வசதியும் போதிய அளவில் இல்லை. வாகன போக்குவரத்துகளை முறைப்படுத்தவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அடிக்கடி வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சாலை விபத்துக்களும் நடக்கிறது. எனவே, வெம்பக்கோட்டை சாலையில் உள்ள மணல் குவியலை அப்புறப்படுத்தி, வாகன போக்குவரத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை